சொன்னீங்களே … செஞ்சீங்களா மிஸ்டர் ரஜினி? – தமிழன்

ரஜினியை பற்றி வழக்கறிஞர் பாலு கேட்டதற்கு பொங்கி எழுந்த ரஜினி ரசிகர்களே- உங்களுக்கு ஞாபக சக்தியும்- சிந்திக்கிற சக்தியும் நன்றாக இருந்து இருந்தால் அப்படி ஒரு கடிதம் நீங்கள் எழுதி இருக்க மாட்டீர்கள்.

உங்க தலைவர் ரஜினி தான் திரையில முதன் முதலில் ‘சொல்றது தான் செய்வேன் – செய்றததான் சொல்வேன் ‘ என்று பேசி  பஞ்ச் டயலாக்கிற்கே பிள்ளையார் சுழி போட்டவர். அப்படி அவர் சொன்னதை எல்லாம் செஞ்சுட்டரா என்பதை சற்று யோசித்து பாருங்கள்.

இன்றைக்கு நீங்கள் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்ளும் ராகவேந்திரா திருமண மண்டபத்தின் திறப்பு விழாவில் இந்த மண்டபத்தை என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கே சேரும் வகையில் அறக்கட்டளைக்கு எழுதி வைக்கிறேன் என்று கூறி அது அன்றைக்கு அனைத்து நாளிதழ் வார இதழ்களிலும் தலைப்பு செய்தியாக வந்தது. ரஜினி தனிப்பட்ட முறையில் சினிமாவில் சம்பாதிப்பதில் யாருக்கும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஆனால் அறக்கட்டளைக்கு எழுதி வைக்கிறேன் என்று வாய்சவடால் விட்டாரே இது வரை அந்த அறக்கட்டளை வருமானத்தில் இருந்து யாருக்கு எவ்வளவு செய்தார் என்று ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடமுடியுமா? கடந்த 20 வருடங்களில் ஒரு ஏழைக்கும் தனது மண்டபத்தை எதற்கும் இலவசமாக கொடுக்காத ரஜினி நடிகர் சங்க தேர்தலுக்கு நடிகர்கள் பிரச்சாரம் செய்ய மட்டும் இலவசமாக கொடுத்தார். இது தான் உங்களுடைய ”சொல்றது தான் செய்வேன் – செய்றததான் சொல்வேன்’ லட்சணமா ரஜினி. கொடுத்த பொருளையும் கொடுத்த வாக்கையும் திரும்ப பெற மாட்டேன் என்று பல படங்களில் சொன்னவரே தானம் கொடுத்த பொருளுக்கான வருமான கணக்கை தெரிவிப்பீரா?

நீங்க அரசியலுக்கு வரும் முடிவு ஆண்டவன் கிட்டேயே இருக்கட்டும். ஆனா உங்க பெண்கள் திருமணத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு விருந்து தர்றதா சொன்னீங்களே இதுக்குமா இன்னும் ஆண்டவன் உங்களுக்கு ஒப்புதல் தரவில்லை? இல்லை உங்கள் மனைவி- மக்கள் ஒப்புதல் தரவில்லையா? சொல்லுங்கள் ரஜினி சொல்லுங்கள். உலகத்தில் திருமணத்திற்கு- வரவேற்பிற்கு என்று தனித்தனியாக பத்திரிக்கை அடித்தவர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். திருமணத்திற்கு ரசிகர்கள் யாரும் வரவேண்டாம் என்று பத்திரிக்கை அடித்த ஒரே நபர் நீங்கள் தானே. இதுவரை யாரும் செய்யாத ஒன்றை செய்ததால் தான் நீங்கள் சூப்பர் ஸ்டாரோ?.

காசு பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு என்னுடன் யாரும் வர வேண்டாம் என்று உத்தமர் போல உளறிகொட்டி உள்ள ரஜினி அவர்கள் தனது திரைப்படத்தை திரையிடும் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எனது திரைப்படத்தினை பார்க்க வரும் ரசிகர்களிடம் அதிக கட்டணத்தில் டிக்கெட் விற்று அவர்களின் காசை கொள்ளை அடிக்க விட மாட்டேன் என்று கூற முடியுமா?. அவ்வளவு ஏன் எனது திரைப்படத்திற்கு அரசு அனுமதித்த விலையில் தான் டிக்கெட் விற்க வேண்டும் அதற்கு முறைப்படி கட்டணம் குறிப்பிட்டுள்ள டிக்கெட் தான் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதனை நடைமுறைப்படுத்த முடியுமா?. நீங்கள் நினைத்தால் உங்கள் படத்திற்கு மட்டுமாவது இதனை செய்ய முடியும். இதனை செய்வீர்களா?.

இவ்வளவு ஏன் உங்களது ரசிகர்கள் படம் வெளியாகும் தினத்தன்று முதல் காட்சி ரசிகர்கள் சிறப்புக்காட்சி என்று நடத்துகிறார்களே அந்த காட்சிக்காவது அரசு நிர்ணயித்த விலையில் உங்களால் டிக்கெட் பெற்று தர முடியமா? அவர்களே 800 சீட் உள்ள ஒரு தியேட்டரில் ஒரு காட்சிக்கு சுமார் 4 லட்சம் கட்டிதானே ஒரு சிறப்பு காட்சி நடத்துகின்றனர். உங்களுக்காக போஸ்டர் அடித்து- கட் அவுட் வைத்து சில ஆயிரங்கள் செலவு செய்யும் பக்தர்களே( அப்படிதான் அவர்கள் கூறி கொள்கின்றனர்) நியாயமான விலையில் சினிமா பார்க்க உங்களது செல்வாக்கு பயன் தராது என்ற போது உங்களை விட்டு தொலைவில் இருக்கும் சராசரி சினிமா ரசிகனின் நிலை என்ன. இதில் எதற்கு வெற்று ஜம்பம் ‘ பணம் பண்ணும் ஆசை இருப்பவர்கள்’ என்னை விட்டு விலகி விடுங்கள் என்று. முதலில் உங்கள் துறையில் இருக்கும் சில ஆயிரம் பேர் உங்களை வைத்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்துங்கள். அடுத்தது லட்சக்கணக்கான ரசிகர்களையும்- அரசியல் வாதிகளையும் திருத்தலாம்;. கூரை ஏறி கோழி புடிக்க முடியாதவன் வானத்தை கிழித்து வைகுண்டம் காட்ட வந்தானாம் என்பது போல் ஆகி விடும் உங்கள் நிலைமை.

1996ம் ஆண்டு ‘ ஜெயலலிதா மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று உங்களிடம் சொல்லி சொல்ல சொன்ன ஆண்டவன் அதே ஜெயலலிதா 2001ம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்று வந்தவுடன் தைரியலட்சுமி என்று சொல்ல சொன்னாரா என்பதை ஏன் அப்போது தெரியபடுத்தவில்லை. இவ்வளவு சொன்ன ஆண்டவன் 2004ம் ஆண்டு அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை நீங்கள் ஆதரித்து பேசிய போது அந்த கூட்டணி தமிழகத்தில் மண்ணை கவ்வும் என்பதை உங்களுக்கு சொல்லவில்லையா?.

இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இல்லாத பெருமை தமிழகத்திற்கு உண்டு. அது தான் மனிதனை மனிதன் சமமாக மதிக்க வேண்டும் என்ற உணர்வை- நாகரிகத்தை உண்டாக்கிய சுயமரியாதை இயக்கம் தோன்றிய மண். உங்களுடன் புகைப்படம் எடுக்க வரும் ரசிகர்களுடன் போட்டோ எடுக்க தினமும் 2 மணி நேரம் ஒதுக்கி இருப்பதாக தமிழ் நாளிதழ்கள் புளங்காகிதம் அடைந்து செய்தி வெளியிட்டுள்ளன. நீங்கள் முதல் நாள் பேசுகையில் நீண்ட நேரம் நிற்க முடியாததால்  நாற்காலியில் உட்கார்ந்து கொள்வதாகவும் ரசிகர்கள் அருகில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்து கொள்ளலாம் என்று ‘பெருந்தன்மையோடு’ அறிவித்து இருக்கிறீர்கள். ஏன் இதையே 2பேர் அமரும் சோபா போட்டு உங்கள அருகில் ரசிகர்களை அமர வைத்து போட்டோ எடுத்து இருக்கலாமே?. உங்கள் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் கொடுத்த தமிழ் ரசிகர்களை உங்கள் அருகில் மண்டி போட்டு நிற்க வைப்பது தான் நீங்கள் உங்கள் உயிர் மூச்சான ரசிகர்களுக்கு செய்யும் மரியதையா?.

இந்திய பிரதமர் ஜப்பானில் உங்கள் பெயர் சொல்லி பேசுகிறார். பிரதமர் வேட்பாளராக இருந்த மோடி உங்கள் வீடு தேடி வந்து டீ குடிக்கிறார். 1996ம் ஆண்டு முதல் தமிழகத்தில் யார் முதலமைச்சர் ஆனாலும் உங்களுக்கு முன் வரிசையில் இருக்கை போடப்படுகிறது. பத்மஸ்ரீ- பத்மபூசண் அனைத்தும் உங்கள் வீடு தேடி வருகிறது. மலேசிய பிரதமர் வீடு தேடி வருகிறார். இது அத்தனைக்கும் உங்களை கை தட்டி ரசிக்கும் ரசிகர்கள் தான் காரணம். அவர்களை மண்டியிட வைத்து போட்டோ எடுப்பது தான் உங்களை ‘வாழ வைத்த தமிழ் பாலு’க்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையா?

இப்படி எல்லா திசையிலும் பஞ்சராகி நிற்கும் சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக்குகளுக்கு ரஜினியோ அவரது ரசிகர்களோ பதிலளித்தால் தமிழ் கூறும் நல்லுகம் மகிழ்ச்சி அடையும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?


நேற்று நமது தளத்தில் பிரசுரமாகி இருந்த ‘ ரஜினியும் பொங்கும் பொறாமையும்’ கட்டுரைக்கு எதிர்வினையாக வந்திருந்த பதிலை அப்படியே பிரசுரிக்கிறோம். படிக்கும் வாசகர்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் யார் சொல்வது சரி என்பதை.