கர்ஜித்த ‘கஜேந்திரா’வும்- பம்மிய ‘பாபா’வும்

இரண்டு நாட்களாக பா.ம.க. வழக்கறிஞர் பாலு கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலும், ரஜினிக்கு பல்வேறு கேள்விகளுமாக நமது ‘ஹலோஏசியா’ இணைய தளம் பெரும் பரபரப்பாக இயங்கி வந்தது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போல இரு தரப்பு கேள்விகளிலும்; நியாயம் இருந்தாலும், இதையும் தாண்டிய வரலாற்று பின்னணியோடு நடுநிலையான கோணம் ஒன்று உள்ளது. அந்த பின்னணியில் நீண்ட காலமாக தமிழகத்து அரசியல் நகர்வுகளை உற்று நோக்கி வரும் ஒருவர் நமக்கு அனுப்பி உள்ள கடிதத்தின் இருந்து சில பகுதிகள்……

  விஜயகாந்த் நடித்த’ கஜேந்திரா’ ரஜினி நடித்த ‘பாபா’ இரண்டு படங்களுக்கும் இரண்டு ஒற்றுமைகள் உண்டு. முதல் ஒற்றுமை இரண்டுமே தோல்வி படங்கள். இரண்டாவது ஒற்றுமை இரண்டுமே பா.ம.க. செய்த பிரச்சினையால் தோல்வியை சந்தித்த படங்கள். அதே போல் இதில்’கஜேந்திரா’ தோல்வியிலும் ஒரு சாதனை படைத்தது ஆனால் ‘பாபா’வோ  ஒரே தோல்வியில் துவண்டு பதுங்கியது. ஆனால் இந்த சாதனை மற்றும் பதுங்கல் இரண்டுமே பா.ம.க. என்ற புள்ளியில் தான் முட்டுகிறது. இது தான் இந்த செய்தியின் முரண் நகையும், அடிநாதமுமாக இருக்கிறது. இதை தெரிந்து கொள்ள சின்ன பிளாஸ்பேக்கிற்கு செல்வோம்.

2002ம் ஆண்டு ரஜினியின் பாபா படம் வெளிவருகிறது. அந்த படத்தில் ரஜினி புகைப்பிடிப்பது போல் காட்சிகள் இருக்கிறது. எனவே அந்த காட்சிகளை நீக்க வேண்டும். இல்லை என்றால் படம் வெளிவர விடமாட்டோம் என்று பா.ம.க. முண்டாசு தட்டியது. அதையும் மீறி படத்தினைரிலீஸ் செய்த வட மாவட்ட தியேட்டர்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. எல்லாவற்றிற்கும் மேலாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தியேட்டரில் இருந்து பாபா படத்தின் பிலிம் பெட்டியை தூக்கி கொண்டு போய் முந்திரி காட்டுக்குள் ஒளித்து வைத்து விட்டனர் பாட்டாளி சொந்தங்கள். இதில் கிட்டதட்ட ஒரு திரைமறைவு சமாதானம் மற்றும் பேச்சு வார்த்தைக்கு பிறகே பாபா பட பெட்டி திரையரங்கம் வந்தது. இந்த பிரச்சினையில் திரைநாயகன் ரஜினியை பா.ம.க.வின் எளிய தொண்டர்கள் அப்பட்டமாக வென்றார்கள்.

இதற்கு எதிர்வினையாக அந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக மதுரைக்கு வந்த டாக்டர் ராமதாஸிற்கு கருப்பு கொடி காட்டினார்கள் மதுரை ரஜினி ரசிகர்கள். ஏற்கனவே ரஜினி பலூனை பஞ்சராக்கி விட்டோம் என்று பெருமை பேசி வந்த ராமதாஸ் உடன் வந்த பா.ம.க   தொண்டர்கள் வழக்கம் போல் தங்களது உருட்டுகட்டை தாக்குதல் நடத்தியதில் 6க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மண்டை உடைந்தது- தாடை கிழிந்தது.

இதில் உச்சகட்ட வெறியான ரஜினி பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வன்முறைகளின் துணை கொண்டு கட்சி நடத்துகிறார், வருகிற தேர்தலில் அவரை மண்ணை கவ்வ வைப்போம் என்று கூறியதுடன் 2004 பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. இருந்த தி.மு.க. கூட்டணியை எதிர்ப்பதற்காகவே வலிய போய் அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணியை ஆதரித்தார். பா.ம.க.வை எதிர்த்து ரஜினி சொந்த செலவில் போஸ்டர்கள் அடித்து சி.டி.க்கள் போட்டு ரசிகர்களிடம் கொடுத்து அவர்களும் தீவிர பிரச்சாரம் செய்தனர். ஆனாலும் பா.ம.க. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வென்றது. மாறாக ரஜினி ஆதரித்த அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் படு தோல்வி அடைந்தது ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆண்டி கிளைமாக்ஸாக அமைந்தது.

அதை விட பெரும் கொடுமை, தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்று ரஜினி வெளியிட்ட அறிக்கையில், ‘ ஒரு கொள்கையை முன்வைத்து இந்த தேர்தலில் பா.ம.க.வை எதிர்த்தோம். மக்கள் அவர்களை வெற்றி பெற ஆதரவு அளித்துள்ளனர். இத்தோடு இந்த பிரச்சினையை முடித்துகொள்வோம். ரசிகர்கள் அவரவர் வேலையை பாருங்கள். வெற்றி பெற்றவர்கள் தங்களது பணியை செய்வார்கள்’ என்று கூறி சத்தமில்லாமல் பம்மி பதுங்கி விட்டார். ‘பாயும் புலியும் நான்தான்டா பயந்து போக மாட்டேன்டா’ என்ற இவரது சினிமா பாடலை  கேட்டு ரசிகர்களானவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டனர்.

ஆனால் ‘ கஜேந்திராவின’; கதையோ வேறு மாதிரி.  2004ம் ஆண்டு விஜயகாந்த் ரமணா படத்தின் இயக்குனர் முருகதாஸின் திருமணத்திற்காக உளுந்தூர்பேட்டை வந்தார். அந்த திருமணவிழாவில் பேசும் போது ‘அரசியல் தலைவர்களின் வாரிசுகள் மக்களை சந்திக்காமல் கொள்ளை புற வழியாக மந்திரிகள் ஆகிறார்கள்’ என டாக்டர் அன்புமணி ராமதாஸை பெயர் சொல்லாமல் விமர்சித்தார். அவரது விமர்சனத்தை புரிந்து கொண்ட பா.ம.க. சொந்தங்கள் ஏற்கனவே பாபாவை தெறிக்க விட்ட மாதிரி விஜயகாந்தின் ‘ கஜேந்திரா’ படத்தை தெறிக்க விட்டனர். வட மாவட்டங்களில் பல ஊர்களில் இந்த படம் வெளியாகவே முடியவில்லை. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என மூன்று தரப்பிற்கும் சுமார் 5 கோடி ரூபாய் அந்த காலத்தில் நஷ்டம் ஆகி இருக்கும்.

ராமதாஸ் தனக்கென ஒரு கட்சி வைத்திருப்பதால் தானே இப்படி எல்லாம் ஆடுகிறார் என்று நினைத்த விஜயகாந்த் அடுத்த 2005ம் ஆண்டே பா.ம.க.விற்கு பதிலடி கொடுக்க  தே.மு.தி.க.வை ஆரம்பித்தார். தனது கட்சியை பா.ம.க.விற்கு நேர் எதிர்கட்சியாக வளர்த்தார். 2006ம்ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியதுடன் தானும் பா.ம.க.வின் கோட்டையான விருத்தாசலம் தொகுதியில் நின்றார். அந்த தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெறுவார் என்று யாருமே நினைக்காத நிலையில் அந்த தொகுதியின் வாக்காளர்களாக இருந்த வன்னியர் அல்லாத அந்நியர்கள் எல்லாம் ஒரு சேர வாக்களித்து அவரை வெற்றி பெற வைத்தனர்; அது மட்டும் இல்லாமல் தே.மு.தி.க. பிரித்த வாக்குகளால் பா.ம.க. மட்டும் சுமார் 18 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

தனக்கு சுமார் 5 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய பா.ம.க.விற்கு அன்று முதல் இன்று வரை தலை எடுக்காதவாறு செய்து விட்டார். ஒருகாலத்தில் 7 எம்.பிக்கள் 25 எம்.எல்.ஏ.க்கள்- 2 மத்திய மந்திரிகள்  என்று இருந்த கட்சி இன்று ஒரே ஒரு எம்.பி.யுடன் (அதுவும் தே.மு.தி.க. இருந்த கூட்டணியால் கிடைத்தது) சுருங்கி போனதுடன் பா.ம.க.வின் பேரம் பேசும் ஆற்றலையும் வற்ற வைத்தது தான் ‘கஜேந்திரா’வின்சாதனை. அது மட்டும் இல்லாம் 2006 முதல் கடந்த தேர்தல் வரை இடையில் அந்த கட்சி தோல்வியையே பெற்றாலும் தமிழகத்தின் தேர்தல்களம் என்னவோ விஜயகாந்தை சுற்றியே வந்தது.

இந்த இடத்தில் ஒரு தேர்தல் தோல்வியிலேயே பம்மி பதுங்கிய பாபாவையும்- 233 தொகுதிகளிலும் டெபாசிட்டை பறிகொடுத்திருந்தபோதும் கர்ஜித்து எகிறி அடித்த கஜேந்திராவையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியாது.

இப்போது ரஜினி சொல்லி இருக்கிறார்’ போர் வரும் போது போர் செய்வோம். அதுவரை பொறுமையாக இருப்போம்’ என்று. இதை கேட்கும்போது ஒன்று நினைவிற்கு வருகிறது. 2000ம் ஆண்டுகளில் மூப்பனார் அவர்கள் ‘2001ம் ஆண்டில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்’ என்று அடிக்கடி கூட்டங்களில் பேசி வந்தார். அதற்கு பதில் கொடுத்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து ‘ 2001ம் ஆண்டு வரும் ஆனால்காங்கிரஸ் ஆட்சிக்கு வராது’ என்றார். அது போல தமிழக அரசியல் களத்தில் போர் வேண்டுமானல் வராலாம். ஆனால் ரஜினி வரமாட்டார். சந்தேகம் உள்ளவர்கள் மேலே உள்ள பாபா எபிசோட்டை திரும்ப படித்து பாருங்கள்.