பூகோள அரசியல்… திக்கற்றுத் தவிக்கும் தமிழர்கள்!

உண்மையில் ஈழப் போருக்கும் தமிழர்கள் படும் துயரங்களுக்கும் இலங்கை ராணுவம் மட்டும் காரணம் அல்ல; வேறு யாரெல்லாம் காரணம்?
இந்தியாவுக்குத் தெற்கே, ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 35 கிலோ மீட்டரில் உள்ள இலங்கைத் தீவு இந்தியப் பெருங்கடலின் மிக முக்கியமான ஒரு நாடு. அளவில் சிறியதாக இருந்தாலும்கூட, அது அமைந்திருக்கும் அமைப்பு பூகோள ரீதியாக மிக முக்கியமான இடத்தில் அமைந்திருக்கிறது. மேற்கு உலக நாடுகளையும், ஆசிய, பசிபிக் பரப்புகளுக்குமான ஒரு மையப்புள்ளியாக இலங்கைத் தீவு உள்ளது.
உலகின் வல்லரசாக இரண்டு நாடுகள் இருந்தன. ஒன்று அமெரிக்கா இன்னொன்று சோவியத் ரஷ்யா. இவை இரண்டுமே பரம எதிரிகள். இந்த இரண்டு நாடுகளின் தலைமையில்தான் உலக நாடுகளே இரண்டு அணிகளாகப் பிரிந்து நின்றன. அந்த வகையில் இந்தியா ரஷ்யாவின் உறவு நாடாக இருந்தது. யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் சோவியத் ரஷ்யா என்று உலகின் வலிமையான நாடாக இருந்த யுஎஸ்எஸ்ஆர். சிதறுண்டது. வல்லரசு வலிமையை அது இழந்தது.
எந்த ஒரு நாடும் வல்லரசாக உலக அரங்கில் திகழ வேண்டும் என்றால் அது பொருளாதாரத்தில் தலைசிறந்து, வலிமையாக விளங்க வேண்டும். அதையடுத்தே ராணுவ வலிமைகள் என்பதெல்லாம். அமெரிக்கா மட்டும்தான் வல்லரசு என்ற நிலை சில காலம் நீடித்த நிலையில் யுஎஸ்எஸ்ஆரின் இடத்தை சீனா பிடித்துக்கொண்டது. உலகின் இரண்டாவது வலிமை வாய்ந்த வல்லரசாக தன்னைக் கட்டமைத்துக்கொண்டது சீனா.
சீனாவின் ஒரே நோக்கம் நகர்வின் திசை. அமெரிக்காவைப் பின்தள்ளியபடி முதலிடத்தை நோக்கிச் செல்வதே. சரி, இதற்கும் இலங்கைக்கும் ஈழப்பிரச்சனைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுவது இயற்கை. மீண்டும், இலங்கையின் பூகோள அமைப்பை நினைவுகூர்வோம். இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது இலங்கை மேற்குலக நாடுகளின் ராணுவத் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.
ஆக, அங்கே ‘ராணுவ கேம்ப்’ அடித்தால் ஆசிய, பசிபிக் பரப்பில் ஆதிக்கம் செலுத்த முடியும், தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் தாக்குதல் நடத்த முடியும். இலங்கைத் தீவில் தனது ராணுவத் தளத்தை அமைப்பது என்பது அமெரிக்காவின் சுமார் 45 ஆண்டுகாலக் கனவு. இதற்காக திரிகோண மலையில் தனது தளத்தை அமைக்க அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டது.
ரஷ்யாவின் நட்பு நாடாக இருந்த இந்தியா இதைக் கடுமையாக எதிர்த்தது. இந்தியப் பெருங்கடலுக்குள் அமெரிக்கா கால்வைப்பதை இந்தியா அறவே விரும்பவில்லை. புள்ளப்பூச்சியை மடியில் கட்டிக்கொள்ள ஒருபோதும் எந்த நாடும் விரும்பாதுதானே. இந்தியாவை மீறி இலங்கையும் அமெரிக்காவுக்குப் பச்சைக் கொடி காண்பிக்க முடியாத நிலை.
இந்தியாவின் எதிர்ப்பைச் சமாளிக்கவும் இந்தியப் பெருங்கடலில் கால் ஊன்றவும் 1970-களில் அப்போதைய இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனேவை தன் நட்பு வட்டத்துக்குள் வளைத்துப்போட்டது அமெரிக்கா. இப்போது இந்தியாவுக்கு, ஜெயவர்த்தனேவை தன் வழிக்குக் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தம். சிங்களம் Vs தமிழ் இன உணர்வு தூண்டப்பட்டது. ஏற்கனவே நீருபூத்த நெருப்பாக இருந்த அந்த உணர்வு பற்றிக்கொள்ளத் தொடங்கியது.
இலங்கை அரசை முறைப்படி எதிர்த்துப் போராட தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் பணமும் கொடுத்தது இந்திய ராணுவம். இதற்கு உத்தரவிட்டவர் இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. எந்தத் திரிகோணமலையில் அமெரிக்கா ராணுவத்தளம் அமைக்க விரும்பியதோ அந்த இடம் புலிகளின் கைவசம் சென்றது. ஜெயவர்த்தனேவுக்கு இது தலைவலியாகிப்போனது.
எப்படியாவது இந்தியப் பெருங்கடலில் தளம் அமைத்தே தீரவேண்டும் என்று உறுதியாக இருந்த அமெரிக்கா, புலிகளின் போராளிக்குழுக்களின் எழுச்சியைடுத்து இலங்கை மண்ணில் இனிக் கால் ஊன்ற முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இலங்கைக்கு நேர் தெற்கே சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டீக்கோ கார்சியா (Diego Garcia ) எனும் தீவுக்குச் சென்று அங்கிருந்த மக்களை விரட்டியடித்துவிட்டு ராணுவத் தளத்தை அமைத்துக்கொண்டது.
இலங்கையில் சிங்களத்துக்கு எதிரான ஈழப் போராட்டத்தை துவக்கி வைத்து அமெரிக்காவை டீக்கோ கார்சியா (Diego Garcia ) தீவுகளுக்கு அனுப்பி வைத்து அதில் வெற்றிகண்டது இந்தியா. இந்திரா காந்திக்குப் பிறகு ராஜிவ் காந்தி இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றபோது இலங்கையின் பூகோள அரசியலில் வேறு மாற்றங்கள் நிகழத் தொடங்கின.
காரணம், அதற்குள் விடுதலைப் புலிகள் இயக்கம் பெரும் வளர்ச்சியடைந்துவிட்டது. ஏதோ உள்நாட்டுக் கலகத்தோடு நின்றுவிடும் என்று எதிர்பார்த்திருந்த இந்தியாவுக்கே புலிகளின் ராணுவ வளர்ச்சி பெருத்த அதிர்ச்சியாக மாறிப்போயிருந்தது. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பினார் ராஜிவ் காந்தி. ஆனால், அங்கே நிலை மாறியது, இலங்கை ராணுவத்துடன் இணைந்து புலிகள் இந்திய அமைதிப்படையை எதிர்த்துப் போராடும் சூழல் உருவானது.
காரணம், அமெரிக்காவை விரட்டுவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்ப் போராளிகள் இயக்கத்தை அந்தப் பணி முடிந்ததும் ஒடுக்க வேண்டிய நிலைப்பாட்டை இந்தியா எடுத்தது. இது புலிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனி நாடு வாங்கித் தருவார்கள் என்று பார்த்தால் தங்களை ஆசை காட்டிப் பயன்படுத்திக் கொண்டுவிட்டார்களே என்ற ஆத்திரம் எழுந்தது.
அமெரிக்கா என்றால் அமெரிக்கா மட்டுமல்ல, அதன் நட்பு, அடிமை நாடுகளும் அதில் அடக்கம். புலிகளின் சிந்தாந்தம், உறுதிப்பாடு ஆகியவை இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த விரும்பிய அமெரிக்கா, சீனா மற்றும் அந்த இரு நாடுகளிடமும் இருந்து இலங்கையை தன்பக்கம் நகர்த்தி வைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்த இந்தியா போன்ற நாடுகளுக்கும் பெருத்த முட்டுக்கட்டையாக இருந்தது.
இதையடுத்து, புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் சுமார் 20 நாடுகள் ஒன்று சேர்ந்தன. அங்கீகரிக்கப்படாத ஒரு ராணுவக் குழுவை உருவாக்கி இலங்கையின் வட கிழக்கு என்ற சிறு பிராந்தியத்துக்குள் நின்று கட்டமைக்கப்பட்ட போர் மூலம் தங்களுக்கே சவால் விடும் அளவுக்கு புலிகள் இயக்கம் வளர்ந்ததை இந்த நாடுகள் எதுவும் ரசிக்கவில்லை.
இந்த நிலையில்தான், மகிந்த ராஜபக்ச ஒரு சூப்பர் கேம் ஆடினார். சீனாவோடு கைகுலுக்கினார். உலகின் முதல் வல்லரசு இடத்தை நோக்கி நகரும் சீனாவுக்கு இது லட்டு மாதிரியான சூழலை உருவாக்கியது. காரணம், கடல்வழி ஆதிக்கமே ஒரு நாட்டின் வல்லரசுத் தன்மையைத் தீர்மானிக்கும் மிக முக்கியக் காரணி.
அமெரிக்கா மட்டும் இலங்கைக்குள் நுழைய முனைந்தபோது இறங்கி நின்று எதிர்த்து விரட்டிய இந்தியா, தற்போது சீனாவை விரட்ட வேண்டிய நிலையில் அமெரிக்காவோடு கை கோர்த்தது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசை எதிர்த்து (மகிந்த ராஜபச்சவை எதிர்த்து) 2013 ல் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. ஆகா, அமெரிக்காதான் தமிழர்களின் விடிவெள்ளி என்று தமிழ்ச் சமூகத்தை நம்ப வைத்தது அமெரிக்கா.
இதற்கிடையில் போர் முடிந்த நிலையில் சிங்களவர்களின் கதாநாயகனாகத் திகழ்ந்த ராஜபக்ச அதிபர் தேர்தலை அறிவித்தார். போர் முடிந்து வேதனைகளையும் வடுக்களையும் சுமந்து திரிந்த தமிழர்கள், இஸ்லாமியர்களையும் (சமயம் பார்த்து) ஒன்றிணைத்து மகிந்த ராஜபக்சவை தோற்கடித்தது அமெரிக்கா. மைத்திரி பால சிறிசேன, ரணில் கூட்டணியை அமரவைத்தது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க அமெரிக்கா அடித்த ஸ்டன்ட் இது. போருக்கும் தமிழர்கள் பயன்படுத்தப்பட்டார்கள், வாக்களிக்கவும் பயன்படுத்தப்பட்டார்கள். தாங்கள் விரும்பிய மைத்திரி பால சிறிசேன அரசு அமர்ந்ததும் 6 ஆண்டுகளில் அதே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தைக் கொண்டுவந்தது அமெரிக்கா.
இப்போது, இலங்கை மண்ணில் சீனா கால் ஊன்றிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும். எதிரிக்கு எதிரி நண்பன் நிலை. அன்று அமெரிக்காவை விரட்ட தமிழர்களுக்கு உதவியவர்களே 2009 ம் ஆண்டு புலிகளை அழிக்கவும் உதவினர்.
2013-ம் ஆண்டில் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. சபையில் எடுத்த அமெரிக்கா, சீன ஆதரவாளரான மகிந்தவை வீழ்த்திய பின் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. சீனாவைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்து இலங்கை அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்பதெல்லாம் அஜெண்டாவில் இல்லை.
அதன் முத்துமாலை (அல்லது முத்துச்சரம்) திட்டத்தின்படி இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளை பொருளாதர அடிப்படையில் ஏற்கனவே தன் வசம் கொண்டுவந்துவிட்டது, அதில் இருந்து அந்த நாடுகள் பின்வாங்க முடியாது. அமெரிக்கா (அதன் நட்புநாடுகள்), இந்தியா (அதன் நட்பு நாடுகள்), சீனா (அதன் நட்பு நாடுகள்) ஆகியவற்றின் அரசியல் தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்றார்போலவே இலங்கையை ஆண்ட, ஆளும், ஆளப்போகும் அரசுகளும், வட கிழக்கில் வாழும் தமிழர்களும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள், பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், பயன்படுத்தப்படப்போகிறார்கள்.
“பன்னாட்டு அரசியலில் இரக்கத்திற்கு இடம் இல்லை” என்பதுதான் விதி. அந்த விதிக்குப் பலிகடாக்கள்தான் தமிழர்கள். எப்போதெல்லாம் தேவையோ அப்போது வெட்டப்படுவார்கள். பன்னாட்டு அரசியல் மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியலும் அதே பூகோள ரீதியான அரசியலை மையமாக வைத்தே ஈழத்தமிழர்களை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தியே வந்திருக்கிறது.
இப்போது கட்டுரையின் முதல் பத்தியை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்.
– விஷ்வா விஸ்வநாத், ஊடகவியலாளர்
(முள்ளிவாய்க்கால் நினைவு மாதத்தையொட்டி எழுதப்பட்ட கட்டுரை)