தடுமாறி கொண்டிருக்கும் தமிழ் ???

தடுமாறி கொண்டிருக்கும் தமிழே இல்லாத தமிழ் இருக்கை- இளம்பரிதி

கார்ட்வர்ட் பல்கலைழகத்தில் (Hardvard University) தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் ஆய்வுகளுக்காக தமிழ் இருக்கை (தமிழ்த்துறை) அமைக்கும் முயற்சிக்காக தேவைப்படும் சுமார் ரூ 40 கோடி, திரட்டுவதற்காக ஏழு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் இனம் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக மூச்சு திணறிகொண்டிருக்கிறது. செம்மொழிக்கான 11 தகுதிகளில் அனைத்து தகுதிகளும் பெற்ற ஒரே மொழியாக இருக்கும் தமிழ் மொழிக்கு ஒரு ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என்ற முயற்சியினை பேராசிரியர் டேவிட் சாலமன் தொடங்கி வைக்க அதற்கான நிதி திரட்டும் பணிகள் உலகமெங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

அரசுத் தமிழாசிரியர்களின் பங்கு

இந்த செய்தியின் பின்னாலும், இந்த முயற்சிகளின் பின்னாலும் மிகப்பெரிய வருந்ததக்க நிகழ்வுகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் குறைந்தது 20,000 பேர் தமிழ் துறையில் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் தங்களது சம்பளத்தில் ஒரு நாள் சம்பளத்தை கொடுத்து இருந்தாலே நிச்சயம் தேவையான தொகையில் பாதி தொகை கிடைத்து இருக்கும்.(ஏனென்றால் இவர்கள் அனைவரும் குறைந்தது ரூ 25,000 முதல் ரூ 2 லட்சம் வரை சம்பளம் பெறுவார்கள்).

தமிழுக்குத் தொண்டாற்றும் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள்

இது தவிர பலர் தமிழகத்தில் தமிழில் பத்திரிக்கை நடத்தி நாள்தோறும் லட்சக்கணக்கில்( ஒரு சிலர் கோடி கணக்கில்) லாபம் சம்பாதித்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் யாரும் கேட்காமலே தானாக முன்வந்து கொடுக்க நினைத்து இருந்தாலும் அல்லது தினத்தந்தி முதலாளி மட்டுமே தனி ஆளாக இந்த தொகையை கொடுத்து இருக்கலாம். அவர்கள் தான் ‘தமிழ் வெல்க’ என்ற முழக்கத்துடன் நாளிதழ் விற்கின்றனர்.
1993ம் ஆண்டு முதல் தமிழ் மாலை என்று அரைமணி நேரத்திற்கு ஒரு முறை கூவி கூவி தமிழை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த சன் டிவி மற்றும் தமிழகத்தில் தமிழை வைத்து மூட்டைகளில் பணத்தை அள்ளி சம்பாதித்த எந்த பத்திரிக்கை முதலாளிகளும் கிள்ளி கூட கொடுத்ததாகதகவல்கள் இல்லை.

 

தமிழக அரசின் பங்கு!

234 எம்.எல்.ஏக்கள், 30 அமைச்சர்கள், 55 எம்பிகள்( மக்களவை மற்றும் மாநிலங்கள் அவை) இவர்கள் ஆளுக்கு 10 லட்சம் கொடுத்து இருந்தால் இன்றுஉலகம் முழுக்க நிதி தேடி ஓட தேவை இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை சுமார் 70 கோடி முதல் 100 கோடிசெலவில் நடத்தி கொண்டிருக்கும் தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரே செக்கில் இந்த தொகையை செலுத்தி இருக்க முடியும். ஆனால் கூரை ஏறிகோழி முடிக்க முடியாதவர்கள் உலகமெங்கும் தமிழை பரப்ப தனியான இயக்கம் நடத்த போவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறுகிறார்.

தமிழனுக்கும் தமிழுக்கும் நடிகர்கள் செய்தது என்ன?

கொடுக்க வாய்ப்புள்ள, கடமை உள்ள இத்தனை பேர் கொடுக்க வில்லை. ஆனால் எந்த பிரச்சினை என்றாலும் ரஜினி எவ்வளவு கொடுத்தார், கமல்எவ்வளவு கொடுத்தார், விஜய் எவ்வளவு கொடுத்தார் என்று வெட்டி பஞ்சாயத்து செய்கிறார்கள்.

அதனினும் கொடிது!

இதைவிட பெரும் கொடுமை தமிழுக்கு நிதி சேகரிக்க வடிவமைக்கப்பட்ட இணையத்தளம் ஆங்கிலத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாராண அறிவோடு யோசித்தாலே தமிழ் அறியாத யாரும்இந்த முயற்சிக்கு நன்கொடை வழங்க வாய்ப்பில்லை. ( அபூர்வமாக ஒரு சில பிற இனத்தவரை தவிர்த்து). இந்த இணைய பக்கத்தினை தமிழ் மற்றும்ஆங்கிலத்தில் அமைத்து இருந்தால் கூட ஒரு நியாயம் உண்டு. ஆங்கிலம் அறியாத, தமிழுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கிற தமிழர்களை இந்த முயற்சி ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்’ என்று நந்தனை விலக்கியது போல் விலக்கி உள்ளது. எதற்காக நிதி திரட்டுகிறமோ அந்த கோரிக்கையை முன்வைக்கும் இணைய பக்கத்திலேயே தமிழ் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருப்பவர்களும் கண்ணை மூடிக்கொண்டு நகர்ந்து விட்டனர். இந்த தவறான அணுகுமுறையால் அக்டோபர் 23ந்தேதி மாலை வரை வெறும் 44 சதவீத தொகை தான் வசூலாகி உள்ளது. இதில் யாரிடம் பிரச்சாரம் செய்து இன்னும் தேவையான 56சதவீத தொகையை மீதமுள்ள 248 நாட்களில் வசூல் செய்வார்கள். உலகின் ஐந்து நாடுகளின் ஆட்சி மொழியாகவும், 70க்கும் மேற்பட்ட நாடுகளில்குறிப்பிட்ட எண்ணிக்iயில் வாழும் தமிழர்களின் தாய் மொழிக்கு தான் இந்த நிலை.

விதியே விதியே எங்கள் தாய் தமிழை என்ன செய்ய போகிறாய்?