அம்மா அம்மா அம்மா………… அம்மம்மா

தத்துவன்
அம்மா இருந்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்குமா?
அம்மா இருந்திருந்தால் உதய் மின் திட்டம் வந்திருக்குமா?
அம்மா இருந்திருந்தால் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா இந்த ஆட்டம் ஆடுமா?
அம்மா இருந்திருந்தால், தலையெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாக ஆகியிருப்பானா?
தமிழ்நாட்டு தொலைக்காட்சி வரலாற்றில், புதிய தலைமுறை சேனல் தொடங்கிவைத்த, விவாத கலாச்சாரத்தில், அதிமுக -வினரும் சரி, அதிமுக அனுதாபிகள் என்று அடையாளப்படுத்தப்படும் நபர்களும் சரி, கடந்த ஒரு வருட காலத்தில் அடிக்கடி பேசும் ஸ்லோகன் பாணியிலான வசனங்கள்தான் இவை. நீட் தேர்வு, பாரதீய ஜனதா உள்ளிட்ட விஷயங்கள் குறித்து சொன்னதெல்லாம் ஒரு வேளை சரியாகவும் இருக்கலாம்.
ஆனால், சமீபத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த வரவேற்கதக்க ஒரு ஆக்கபூர்வமான  நிகழ்வுக்கும், இதே பாணியிலான ஸ்லோகனை அதிமுக -வினர் பயன்படுத்தியதுதான் நம்மை உசுப்பிவிட்டுள்ளது. சும்மா இருந்த நம்மை, அம்மாவைச் சொல்லி, பழசையெல்லாம் கொஞ்சம் கிளறி பேச வைக்கிறார்கள்.
இந்திய மத்திய அரசின் ஏகாதிபத்திய போக்குகளில் ஒன்றான மருத்துவத்திற்கான கட்டாய நீட் நுழைவு  தேர்வு கொடுமையால் தன் உயிரை மாய்த்துக்கொண்ட தமிழ் மாணவி அனிதாவின் நினைவாக, அரியலூர் மாவட்டத்தில் அவரின் சொந்த ஊரில் ஒரு நூலகம் திறப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் திமுக -வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அரியலூர் மாவட்டச் செயலாளருமான சிவசங்கரனும் – குன்னம் தொகுதியின் இன்றைய சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான ராமச்சந்திரனும் கலந்துகொண்டார்.  இருவரும், வெகு சகஜமாக அந்த விழாவில் சிரித்துப்பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக -வின் மாவட்ட செயலாளர்கள் ஒரு முக்கிய நிகழ்வில் ஒன்றாக கலந்துகொண்டு, சகஜமாக இருந்ததை, சிலபல அதிமுக-வினர், ‘அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் பயமில்லாமல் கொஞ்சி குலாவியிருப்பார்களா?’ என்ற ரீதியில் புலம்புகிறார்கள்.
முன்னேறாத மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் என்று குறிப்பிடப்படும் வடமாநிலங்களில், மிக முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பொது இடங்களில் சகஜமாக நடந்துகொள்வது மிகவும் சகஜம். ஆனால், இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களுள் மிக முக்கிய மாநிலமான தமிழகத்தில், இத்தகைய விசித்திர கலாச்சாரம் எப்போது தொடங்கி வலுப்பெற்றது என்று நினைவுக் குதிரையை தட்டிவிட்டால், அக்குதிரை சென்று நிற்கும் இடம் இவர்களின் ‘அம்மா’ வின் காலடி தான்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன்; காலத்தில், அவரின் அரசியல் எதிரியான மு.கருணாநிதி மற்றும் திமுக -வுடனான உறவுகளில் பெரிய பழுது என்று எதுவும் இருக்காது. திமுக மற்றும் கருணாநிதி எதிர்ப்புதான் அதிமுக என்ற கட்சியின் அடித்தளம் என்ற நிலை இருந்தபோதும், இரு கட்சிகளின் தலைவர்களும் பொதுவெளியில் நாகரீகம் காக்க தவறியதில்லை. பல பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம், அவர்கள் தங்களின் பழைய நட்பை மறவாமலேயே நடந்து கொண்டுள்ளார்கள். தன் கட்சிக்காரர்கள் ‘கருணாநிதி’ என்று ஒற்றையாக பெயர் சொல்லி அழைப்பதை கூட எப்போதும் விரும்பாதவர் அதிமுக நிறுவனர்.  இவ்வளவு ஏன், திருச்செந்தூர் முருகனின் வேல் காணாமல்போன புகாரில், அன்றைய அதிமுக அரசை எதிர்த்து திமுக தலைவர் மு.கருணாநிதி மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை நடைபயணம் போனபோது, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட, அந்த நெருக்கடியிலும்கூட தன் நண்பரின் நலம் விசாரித்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.
எம்.ஜி.ராமச்சந்திரனுக்குப் பிறகான அதிமுகவின், அதிகாரப் போட்டியில் வெல்கிறார் ஜெயலலிதா. அவரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது அவர் மேற்கொண்ட தீவிர கருணாநிதி எதிர்ப்புநிலை.
இதை தொடர்ந்து திமுக மற்றும் கருணாநிதி எதிர்ப்புதான் அதிமுக என்ற கட்சியின் உயிர்நாதம் என்ற சித்தாந்தம், ஜெயலலிதாவின் காலத்தில் ஒரு புதிய பரிணாமத்திற்குள் நுழைகிறது. அதாவது, ‘மேல்மட்டத்தில் மோசமான விரோதம்; கீழ்மட்டத்தில் வெளியில் தெரியாத உறவு’ என்பதே அந்தப் புதிய பரிணாமம். ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்யும் நிலை தனக்கு வரும் என்று கருணாநிதி நிச்சயம் நினைத்திருக்க வாய்ப்பில்லை.  எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்தில் அரசியலோடு மட்டுமே நின்ற மோதல், ஜெயலலிதாவின் காலத்தில் தனிப்பட்ட தரக்குறைவான மோதலாக உருவெடுத்ததையும் கவனிக்க வேண்டும். இதில் முன்னணியில் நின்றவர் அதிமுக தலைவியே.
இவ்வளவு களேபரங்கள் ஜெயலலிதாவின் பெயரால் நடந்திருந்தாலும், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அப்பலோ மருத்துவமனைக்கு மு.கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் வந்தபோது வரவேற்று பேசியது  மற்றும் அதே காலகட்டத்தில் காவேரி மருத்துவமனையில் சுவாச கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக  அ.தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள்(!) தம்பிதுரை மற்றும் ஜெயக்குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததன் மூலம் தமிழகத்தில் அரசியல் நாகரீகம் திரும்புகிறது என்று பலரும் நினைத்து கொண்டிருந்தனர்.
இந்த சூழலில் தான் அம்மா இருந்திருந்தால், நடிகர் கமலஹாசன் ஆட்சிக்கு
எதிராக பேசுவாரா? ரஜினிகாந்த் சிஸ்டம் சரிஇல்லை என்று சொல்வாரா?, ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்திருக்குமா? டி.டி.வி. தினகரன் வீட்டை விட்டு வெளியே வந்திருப்பாரா? போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடந்திருக்குமா? பஸ் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடந்திருக்குமா? நெடுவாசல்- கதிராமங்கலத்தின் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்திருக்குமா? …மா?……..மா?……மா?…. .மா?…….மா?. என பல ….மா? க்களை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இத்தனை கேள்விகள் மூலம் அ.இ.அ.தி.மு.க.வினர் சொல்லும் வெளிப்படையான ஒரே பதில் இந்த சம்பவங்கள் எதுவும் நடந்திருக்காது. அதே நேரத்தில் அவர்கள் சொல்லும் மறைமுகமான செய்தி மேற்கண்ட ஜனநாயக பூர்வமான எந்த சம்பவங்களும் நடப்பதை ஜெயலலிதா என்ற சர்வாதிகாரி அனுமதித்து இருக்க மாட்டார் என்பது தான். ஏனென்றால் இந்தியாவில் ஜனநாயகம் மூலம் உருவான இரண்டாவது சர்வாதிகாரி ஜெயலலிதா( முதலாமவர் இந்திரா காந்தி).
இன உணர்வு கொழுந்து விட்டு எரிந்த தமிழகத்தில் 1991-1996ம் ஆண்டு ஜெயலலிதாவின் முதல் ஆட்சி காலத்தில் ‘ தமிழ் வாழ்க’ என்று சத்தமாக கூறியவர்களை கூட தடா, பொடா என்ற சட்டங்களை பயன்படுத்தி கைது செய்து தமிழ் செல்வன், தமிழரசி என்று பெயர் வைத்திருந்தவர்கள் கூட தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்ளலாமா என்று யோசிக்கும் அளவிற்கு அச்சப்பட வைத்தவர்.
அந்த அச்சத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வும் ஓரளவு அப்படியே நீடிக்க வைத்தது தான் இன்று தமிழகத்தில் இன உணர்வு இல்லாமல் தமிழ் தாய் வாழ்த்து அவமானப்படுத்தப்பட்ட போது கூட சாதராண தமிழர்கள் ‘ஜென்’ மன நிலையில்  இருந்ததற்கான முதல் காரணம்.
தற்போது தான் தமிழகத்தில் ஜனநாயக காற்று வீசத் தொடங்கி உள்ளது. பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் இப்போது தான் ‘அப்பாடா’ என்று சுதந்திரத்தை உணர தொடங்கி உள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக மூன்றாம் இடத்திற்கு போனது தனக்கு வருத்தமளிக்கிறது என்று டி.டி.வி. தினகரன் ஒரு நேர்காணலில் சொல்லும் அளவிற்கு நிலைமை சுமூகமாக மேம்பட்டுள்ளது. கனிமொழி 2ஜி வழக்கில் விடுதலை செய்யப்பட்டதற்கு தினகரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  அரசியல் ரீதியில் தீவிரமாக எதிர்த்தாலும் பேரறிவாளனுக்கு பரோல் கொடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு   டி.டி.வி. தினகரன் ஆதரவ கொடுக்கிறார். தமிழகத்தில் அரசியல் நாகரீகம் தழைக்க தொடங்கி உள்ளது.  அதற்குள்  மீண்டும்  அம்மா… அம்மா என்று பழைய கொடுங்கோல் கதையை நினைவு படுத்தி  கெடுத்து விடாதீர்கள்.
தமிழகத்தை ஜனநாயக காற்று தழுவட்டும். அன்னை தமிழகம் நிம்மதியாக உறங்கட்டும்.