தொடரட்டும் மோடியின் பொற்காலம்!

மோடியின் அமைச்சரவையே மக்களாட்சிக்கு தேவையானது.

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 282 உறுப்பினர்கள் இருக்கும் போது செல்வந்தர்கள்,கார்ப்பரேட்டுகளுக்கு வழக்குரைஞர்களாக இருந்தவர்கள், தேர்தலையே சந்திக்காதவர்களை மற்றும் தேர்தலில் இதுவரை வெற்றி பெறாதவர்களை மத்திய அமைச்சராக்கி அழகுபார்த் துள்ளார், மோடி – இன்று பொருளாதாரத்தில் பெரும் பணக்காரர்களுக்கு பெரும் லாபமும், ஏழைகள் மேலும் நலிவடைந்து போகவும் இந்த அமைச்சர்களின் ‘கைவண்ணமே’ காரணம்! புறவாசல் வழியாக வந்த அமைச்சர்களில் அனை வருமே அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேபினட் பதவி வகிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அருண் ஜெட்லி தேர்தலில் தோல்வியுற்று பின்புறமாக நுழைந்தவர், அவர்தான் நிதி அமைச்சர்!

நிர்மலா சீத்தாராமன் தேர்தலில் போட்டியிடாமல் பின்புறமாக நுழைந்தவர், அவர் தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்! ஸ்மிருதி இராணி தேர்தலில் போட்டியிட்டு வைப்புத்தொகை இழந்து பிறகு மோடியால் மனித வளத்துறை அமைச்சராக்கப்பட்டார். இவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக குறுகிய காலம் இருந்து பிறகு ஜவுளித்துறை அமைச்சரானார். சுரேஷ் பிரபு – சிவசேனா கட்சியில் இருந்த இவர் பாஜகவிற்கு தாவியதற்காக இவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இவர் ரயில்வே அமைச்சராக இருந்த போதுதான் அதிகம் விபத்து நடைபெற்றது, 2017 அக்டோபர் மாதம் தொடர்ந்து தினசரி ஒரு விபத்து என அய்ந்து விபத்துக்கள் நடந்த நிலையில் எதிர்க்கட்சிகள் பதவி விலக வற்புறுத்தியும் இவர் பதவி விலகவில்லை. பிறகு அமைச்சரவை மாற்றத்தின் போது இவருக்குத் தரையில் ஊரும் ரயிலிலிருந்து வானில் பறக்கும் விமானம் அதாவது சிவில் விமானப் போக்கு வரத்து துறை வரை அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் 100 விழுக்காடு பங்குகளும் விற்பனைசெய்ய முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரவிசங்கர் பிரசாத் – இவரும் எந்த ஒரு தேர்தலையும் சந்தித்ததில்லை, இருப்பினும் இவர் பின்வாசல் வழியாக அமைச்சர் பதவியைப் பெற்று தகவல் தொடர்புத்துறை அமைச்சரானார். முக்தார் அப்பாஸ் நக்வி – இவரும் பீகார் சட்ட மன்றம், நாடாளுமன்றம் இரண்டிலுமே போட்டியிட்டு தோல் வியைக் கண்டவர். இவருக்கும் பின்வாசல் வழியாக கேபினட் அமைச்சர் பதவியைத் தூக்கிக் கொடுத்தார் மோடி.

மகாராட்டிராவைச் சேர்ந்த பிரகாஷ் ஜாவ்டேகர் – இவரும் எந்த ஒரு தேர்தலையும் சந்தித்ததே கிடையாது. இவருக்கு மனிதவளத்துறை அமைச்சர் என்ற ‘பரிசு’ கிடைத்துள்ளது, பெட்ரோலியத்துறையில் கொடிகட்டிப் பறந்த கோயல் குடும்பத்தைச்சேர்ந்த விஜய் கோயல் இதுவரை மேடையேறிப் பேசி வாக்கு வாங்கியது கிடையாது. ஆனால் இவருக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவி!

பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான பிரபல பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர். இவரும் தேர்தலைச் சந்தித்ததே கிடையாது. இவருக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதவி!

சிவசேனாவில் இருந்து காங்கிரசிற்குத் தாவி அதன் பிறகு தனிக் கட்சி துவங்கி, பிறகு மீண்டும் காங்கிரசுக்கு வந்து நாடாளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி அடைந்து பாஜகவில் சேர்ந்தார் நாராயணரானே, இவர் சேர்ந்த உடனேயே இவருக்கு கேபினட் அமைச்சர் தகுதி வழங்கப்பட்டு கொள்கை முடிவு எடுக்கும் குழுவில் இவரும் ஒருவரானார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 282 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து மோடி கேபினட் அமைச்சர் பதவிக்கு தேர்தெடுக்காமல் தனக்குத் தேவையான மற்றும் கார்ப்பரேட்டுகளுடன் எப்போதும் உறவாடிக் கொண்டு இருப்பவர்களுக்கு மட்டுமே கேபினட் அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். பா.ஜ.க. ஆட்சி என்றாலே கார்ப்பரேட்டுக்கான ஆட்சி என்று சுருக்கமாகவே கூறிவிடலாம்.

அன்று 1952இல் ராஜகோபாலாச்சாரியும் கொல்லைப்புறமாக வந்து முதலமைச்சர் ஆனவர். அவர் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடாதவர் என்பதும் நினைவூட்டத்தக்கதாகும்!

 

நன்றி: கலி    பூங்குன்றன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *