காமராசரைக் கல்லால் அடிக்கச் சொன்னவர்?

காமராசரைக் கல்லால் அடிக்கச் சொன்னவர் யார்?

காமராசரைக் கொலை செய்யப் புறப்பட்ட நிர்வாண சாமியார்

1967 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது; தி.மு.க. வெற்றி பெற்றது என்றவுடன் ஈ.வெ.ரா. தனது அரசியல் நிலைமையை மாற்றிக் கொண்டார் என்று ஏதோ பெரிய குற்றத்தைப் பெரி யார் செய்துவிட்டது போல எழுது கிறார் திருவாளர் லட்சுமி நாராயணன்.

காமராசர் அவர்களின் தோல்விக் காக பெரியார் வருந்தினார் என்பது உண்மையே. இது பற்றி விடுதலை அறிக்கை ஒன்றில் (27.2.1967) கீழ்க் கண்டவாறு தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்:

காமராஜர் தோல்வியைப் பற்றி பலர் என்னிடம் வந்து துக்கம் விசாரிக்கும் தன்மை போல தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு நான் அளித்த ஆறுதல், பிப்ரவரி 23-_ந் தேதி தோல்வி யைப் பற்றிக் கவலைப் படுவதை விட 1966 நவம்பர் 7 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற கொலை முயற்சியில் அவர் உயிர் தப்பியதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினேன் என்று பெரியார் எழுதவில்லையா?

இன்றைக்குக் காமராசருக்காகக் கசிந்துருகுவது போல காட்டிக் கொள்ளும் இந்தத் துக்ளக் கும்பல் யார்?

அன்று பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரமாம் டில்லியில் காமராசர் தங்கி இருந்த வீட்டுக்குத் தீ வைத்த ஜனசங்கம் (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தானே?
இன்றைக்கும் அந்த ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பி.ஜே.பி.க்கு அதிகாரப் பூர்வமற்ற இதழாகத்தானே துக்ளக் நடந்து கொண்டிருக்கிறது?

சிறுபான்மை மக்களைப் பல்லா யிரக்கணக்கில் கொன்று குவித்த ஒரு பேர்வழிதான் (நரேந்திர மோடிதான்) இந்தியாவுக்குப் பிரதமராக வரத் தகுதி படைத்த ஒரே ஆள் என்று ஆவேசம் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறதே துக்ளக்

காமராசரை உயிரோடு கொளுத்தும் கூட்டத்துக்குச் சங்கராச்சாரியார் தலைமை தாங்கவில்லையா? நிர்வாண சாமியார்கள் திரிசூலத்துடன் புறப்பட வில்லையா? ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ்., கும்பல் தீவட்டியுடன் புறப்பட்டுச் செல்லவில்லையா?

சந்தேகமிருந்தால் பார்ப்பன ஏடுகளான மித்திரனையும் (4.11.1966) கலைமகளையும் (1.12.1966) ஒரு முறை மீண்டும் புரட்டிப்பார்க்கட்டுமே!

எச்.ஆர். தாக்கர் பொது நல டிரஸ்ட் எனும் பெயரில் முக்கிய பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து என்ன செய்தார்கள்?

எட்டுப் பக்கங்களைக் கொண்ட ஓர் அறிக்கையை ஆங்கிலத்தில் தயாரித்து இந்தியா முழுவதுமுள்ள பெரும் பெரும் பணக்காரர்கள், முதலாளிகள், தொழி லதிபர்கள் மத்தியில் இரகசியமாகச் சுற்றறிக்கையாக வெளியிட்டு, பெரும் பணபலத்தோடு பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் ஆரியக் கலாச் சாரத்தைக் காப்பாற்றிடவேண்டும் என்று கூறி திட்டம் போடவில்லையா?
இந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டால்தான் தந்தை பெரியார் ஏன் காமராசரை ஆதரித்தார் என்பதற்கான ஆழம் அப்பட்டமாகப் புரியும்.

தந்தை பெரியாருக்கு எதிராக முன் னாள் முதல்வர் பக்தவத்சலத்தையும், சி.சுப்பிரமணியத்தையும் கொண்டு வந்து மோதவிடுகிறதே துக்ளக்.

காமராசரைப் படுகொலை செய்ய ஆயத்தப்பட்ட நேரத்தில், இந்தப் புண் ணியவான்கள் என்ன செய்தார்கள்?அதனை கண்டித்து பொதுக்கூட்டம் போடக்கூட தமிழ்நாட்டில் அனுமதி கொடுக்கவில்லையே.

அது மாத்திரமா? எந்த சங்கராச் சாரியார்கள் காமராசரைக் கொலை முயற்சி செய்ய காலிகளை அழைத்துக் கொண்டு வீதிக்கு வந்து நின்றார்களோ, அந்தச் சங்கராச்சாரியார்களின் கால்களில் விழுந்தவர்கள்தானே இந்தப் பக்தவத்சலமும், சி.சுப்பிரமணியமும்.
இது குறித்து தந்தை பெரியார் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டாரே?
ஆட்சி மதவெறியர் வசமே இருப்பதா?

இந்துக்கள் ஆட்சியிலே நம்நாடு இருக்குமானால், இருக்க வேண்டிய கொடிய நிலை, நிர்ப்பந்தம் ஏற்படு மானால் இந்தியா ஆட்சி இந்துக்கள் வசமே இருக்கவேண்டும் என்று கூறுவது சுத்த முட்டாள்தனம் சுத்த மானங்கெட்டதனம் என்றுதானே சொல்ல வேண்டியிருக்கிறது?

இதற்குக் காரண பூதமான ஆதாரம் வேண்டுமானால், ராஜாஜியின் விஸ் வாசமுள்ள சிஷ்யர்களான திருவா ளர்கள், ஏன், கனம் பக்தவத்சலம் அவர்களும், கனம் சுப்பிரமணியம் அவர்களுமே போதுமே!

ஏன்? இவர்கள் இருவரும்தான் தமிழ்நாடு சார்பாக சங்கராச்சாரி என்ற ஒரு பார்ப்பனர் காலில் விழுந்து பிரசாதம் பெற்று, ஓட்டுக்கு அடிப் படை ஆதாரம் தேடிக் கொள்ளும் வேலை செய்திருக்கிறார்கள்.

இவர்கள் கையில், மற்றும் இப்படிப் பட்டவர்கள் கையில் நாடு இருக்குமா னால், இனியும் இருக்க நேரிடுமானால் தமிழர் சமுதாயம் எப்படி முன்னேற முடியும்? எப்படி சுயமரியாதை பெறமுடியும்? உலகோர் முன்னிலையில் மனிதத்தன்மை பெற முடியும்?

இவர்கள் தாங்கள் சங்கராச்சாரிகள் காலில் விழுந்து பிரசாதம் வாங்கி அதற்கு ஆக ஊரார் காட்டும் முட்டாள்தனத்தை தங்களுக்கு பெருமையாகக் கொண்டு பெருமை அடைபவர்கள்; அதன் மூலம் தங்களைச் சங்கராச்சாரி பக்தர்கள் என்று காட்டிக் கொள்கிறார்களா? தத்துவத்தில் தங்களை காமராஜர் எதிரி என்று பார்ப்பனர்களுக்கு காட்டிக் கொள் கிறார்களா? என்பது சிந்திக்கத் தக்கதாகிறது . .

நாடும், ஏடும் சங்கராச்சாரிகளை காமராஜரைக் கொல்ல வந்த கொலைகாரர்கள் என்று வர்ணிக்கிற நிலையில், தப்பித்துக் கொண்ட காமராஜர் இளைப்பு ஆறுவதற்கு முன், கொலைக் கூட்டத்தார் காலில் இந்தப் புண்ணியவான்கள் விழுவது என்றால், இது பக்தியா? பழிவாங்கும் தன்மை என்றே மறுபடியும் அய்யப்படுகிறேன். இது மாத்திரமல்லாமல் காமராஜருக்கு உண்மையான எதிரிகள் யார் யார் என்பது இப்போது இந்த டில்லி சம்பவத்தால் விளங்கிவிட்டனவே என்று தந்தை பெரியார் எழுதினாரே!

காமராசரைக் கொலை செய்ய எத்தனித்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சங்கராச்சாரியார் கால்களில் (அதுவும் அந்தக் காலகட்டத்திலேயே) விழுந்த சி.சுப்பிரமணியத்தையும், எம். பக்தவத்சலத்தையும், லட்சுமி நாரா யண அய்யர் பெரியாருக்கு எதிராக சாட்சி சொல்ல அழைப்பதை இப் பொழுது புரிந்து கொள்ளலாமே!

காமராசர் கொல்லப்படவேண்டும் என்று கருதியவர்களை தூக்கிப் பிடித்து, காமராசர் கொல்லப்பட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை களைக் கண்டித்து நாடெங்கும் எழுச்சியை ஏற்படுத்திய தலைவர் பெரியாரை பார்ப்பனர் லட்சுமி நாராயணன் இகழ்ந்து எழுதுவதன் உட்பொருள் என்ன? காமராசர் கொலை முயற்சி சரித்திரம் என்ற ஒரு நூலையே வெளியிட்டு மக்கள் மத்தி யில் உண்மையை உணரும் நிலையை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அல்லவா?

தந்தை பெரியாருக்கும், காமராச ருக்கும் இடையே இந்த எம்.பக்தவத் சலத்தையும், சி.சுப்பிரமணியத்தையும் நிறுத்தி, மித்திரபேதம் செய்ய முயலுவது பார்ப்பனர்களுக்கே உரித்தான பிறவிக் குணம் அல்லாமல் வேறு என்னவாம்?

காமராசர் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பதவியைத் துறந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் போக முடிவு எடுத்த போது அதனை ஏற்றுக் கொள்ளாமல் தொலை நோக்கோடு தந்தி மூலம் எச்சரித்தவர் தந்தை பெரியார் அல்லவா?

“Either of your own accord or on the advice of others, your resignation of Chief Ministership will be suicidal to Tamilians, Tamil Nadu and ‘yourself’.”

தாங்களாகவோ, பிறர் ஆலோ சனையின் பேரிலோ தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பதவியைத் தாங்கள் ராஜினாமா செய்வதானது, தமிழர் களுக்கும், தமிழ் நாட்டுக்கும், தங்களுக் கும் தற்கொலைக்கு ஒப்பானதாகும் என்று தந்தை பெரியார் தந்தி கொடுத் தாரே, இதில் ஒரே ஒரு எழுத்தை, அரைப் புள்ளியை மாற்றிக் கருத்துக் கொள்ள முடியுமா?
தந்தை பெரியாரின் கணிப்பு, தொலை நோக்கு எத்தகைய துல்லிய மானது!

1967 தேர்தல் முடிவு இதனைத் தானே உறுதிப் படுத்தியது. தேர்தல் முடிந்து கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காமராசர் அவர்கள் தந்தை பெரியார் கூறிய கருத்தை வெளியிட்டு அது உண்மையாகப் போய்விட்டது என்று கூறினாரே!

காமராசரைக் கொலை செய்யக்கூடிய கூட்டம் பூரிசங்கராச்சாரியார் உட்பட

காமராசரும் தோல்வி கண்டு, காங்கிரசும் தோல்வியுற்று, தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, ஆச்சாரி யாருடன் இருந்த கூட்டணியும் முறிந்து சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றம், சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம், தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை, தமிழ், ஆங்கிலம் இரண்டும்தான் என்பதற்கான சட்டம், அரசு அலுவலகங்களில் எந்த மதக் கடவுள் படங்களும் இருக்கக்கூடாது என்கிற ஆணைகளை முதலமைச்சர் அறிஞர் அண்ணா நிறைவேற்றியதுடன், இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் அண்ணா அறிவித் தார் என்றால், அந்த ஆட்சியை ஆதரித் ததும், தந்தை பெரியார் தன் வயப் படுத்திக் கொண்டதும் தமிழர் நலக் கண்ணோட்டத்தில் புத்திசாலித்தனம் தானே?

தேர்தலில் நிற்காத திராவிடர் கழகம், அதன் கொள்கைகளைச் செயல்படுத்த ஓர் ஆட்சி கிடைக்கும் போது ஆதரவு தெரிவிப்பதுதானே சரியானது? அது எப்படி தவறானதாகும்?

ஈ.வெ.ரா. தமது அரசியல் நிலையைச் சிறிது கூட நாணமோ அல்லது தயக்கமோ இல்லாமல் மாற்றிக் கொண்டார் என்று துக்ளக் எழுதுவதில் அர்த்தம் உண்டோ? ஆச்சாரியாருடன் கூட்டு சேர்ந்த அண்ணாதுரை, வெற்றிக்குப்பின் ஆச்சாரியார் சொல் கிறபடி ஆள்வார் என்று பார்ப்பனர் கள் எதிர் பார்த்தார்கள். அந்த ஆசை யில் மண் விழுந்துவிட்டது. அய்யங் காரரான ஆச்சாரியாருக்கே அறிஞர் அண்ணா குழைத்து நாமம் சாத்தினார் என்ற ஆத்திரத்தில் இப்படி எழுது கிறார்கள் என்பது நமக்கு நன்றாகவே புரிகிறது.

பச்சைத் தமிழர் காமராசரைப் பார்ப்பனக் கூட்டம் டில்லியில் படு கொலை செய்ய முயற்சிப்பதற்கு (7.11.1966) முன்பாகவேஅதற்கான தொடக்கத் தையும் கொடுத்தவர் ஆரியர் ராஜாஜி.

சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் (27.2.1966) என்ன பேசினார் ராஜாஜி?

தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள கருப்புக் காக்கையைக் கல்லால் அடித்து வீழ்த்தினால், மற்ற காக்கைகள் தானே பறந்து ஓடிவிடும். தமிழ்நாட்டில் காங்கிரசுக்குத் தோல்வியைக் கொடுக்கவேண்டும் என்று பேசினாரே!

அருப்புக் கோட்டை இடைத் தேர்தலில் என்ன பேசினார் ஆச் சாரியார்? காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல அடி கொடுக்க வேண்டும். அதுவும் செருப்படி போல விழ வேண்டும் என்று பேசினாரே! விடுதலை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தானே செங்காங்கடையில் ஆச்சாரியார் என்று தலைப்பிட்டு தலையங்கம் தீட்டினார். (14.4.1964)

அப்படிப்பட்ட ராஜாஜியோடு 1971 தேர்தலில் காமராசர் கூட்டணி வைத் துக் கொண்டுவிட்டாரே! காமராசரைக் கொலை செய்ய எத்தனித்த ஜனசங்கமும் அதனுடன் சங்கமம் ஆயிற்றே! இது பற்றி காமராசர் தரப்பில்தான் பதில் அளிக்கப்படவேண்டுமே தவிர, தந்தை பெரியார் மாறிவிட்டார் என்று குற்றம் சொல்ல என்ன இருக்கிறது?

சென்னைக் கடற்கரையிலே காமராசருக்கு ஆச்சாரியார் திலக மிட்டார். அப்பொழுது விடுதலை என்ன தலையங்கம் தீட்டியது தெரியுமா?

விபீஷணசரணாகதியின் உச்சக் கட்டமா? (27.2.1971) என்று எழுதிற்றே! காமராசரை ஆதரித்துக் கொண்டி ருந்தபோதே கூட கிருபானந்தவாரி யாரின் காலட்சேபம் நாடெங்கும் நடைபெறுவது நல்லது என்று காம ராசர் சொன்ன பொழுது, கொஞ்சம் கூடத் தயங்காமல், காமராசருக்கு புத்தி கெட்டுப்போய்விட்டதா? என்று சென்னை தேனாம்பேட்டை பொதுக் கூட்டத்தில் (18.12.1963) பளிச்சென்று கேட்டாரே – அதுதான் பெரியார்.

திடீரென்று முத்துராமலிங்கத் தேவ ரையும் இழுத்து வந்து மோதவிடுகிறது துக்ளக்.

முத்து ராமலிங்கத் தேவரோடு எந்த வகையில் தந்தை பெரியார் ஒத்துப் போக முடியும்? முத்துராமலிங்கத்தேவர்தான் தந்தை பெரியார் அவர்களின் எந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்?

தந்தை பெரியார் பற்றி அவர் குறை சொன்னார் என்று எடுத்துக்காட்டுவது – கையில் சரக்கு இல்லாத தன்மையைத் தான் வெளிப்படுத்தும்.

முதுகுளத்தூர் ஜாதிக் கலவரம் நடந்தபோது தேவரைக் கைது செய்யச் சொன்னவர் தந்தை பெரியார். முதல் அமைச்சர் காமராசரும் அதனைச் செய்தார். அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றியும் தேவர் தவறாகப் பேசியதுண்டு. இந்த நிலைமைகள் எல்லாம் கைமேல் நெல்லிக் கனியாக இருக்க, முத்துராம லிங்கத் தேவர் பெரியாரைப் பற்றி சொன்னது எல்லாம் பொருந்தாக் கூற்றே!

திராவிடக் கட்சியோடு கூட்டு சேர்ந் ததே பாவம் என்று முத்துராமலிங்கத் தேவர் சொன்னதாக எடுத்துக் காட் டுகிறதே துக்ளக் -அதே தி.மு.க.வோடு ராஜாஜி கூட்டுச் சேர்ந்தாரே அது என்ன புண்ணியகரமான செயல் என்று சாதிக்கப் போகிறார்களா?

நன்றி: கலி பூங்குன்றன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *