ரஜினியும் பொங்கும் பொறாமையும்…

கடந்த 2 நாட்களாக எல்லா தமிழ் டிவிக்களிலும்- சமூக ஊடங்களிலும் ஒரே புலம்பல். தமிழர்கள் புலம்புவது சகஜம் தானே. இதில் என்ன புதுமை இருக்கிறது என்கிறீர்களா? எல்லாரும் புலம்புவது ஒரே விசயத்தை பற்றி தான் அது ரஜினி ரசிகர்களை ஏமாற்றுகிறார். தனது படங்களை ஓட வைக்கும் வியாபார தந்திரத்திற்காக ரசிகர்களை சந்தித்து அரசியல் பற்றி பேசி பரபரப்பை பற்ற வைக்கிறார் என்கிறார்கள்.

இவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ‘ வரேன்னா உறுதியா சொல்லு 20 வருடமாக அது கடவுள் கையில் இருக்கு ஏமாற்ற வேண்டாம் ‘ என்பது முதலாவது குற்றச்சாட்டு. இதை ஒரு தனியார் டிவியில் மீண்டும் மீண்டும் உரக்க சொன்னவர் பா.மா.க. வழக்கறிஞர் பாலு.

ஒரு சின்ன பிளாஷ் பேக். 30 வருடங்களுக்கு முன்பு பா.ம.க.வின் அனைத்து மேடைகளிலும் டாக்டர் ராமதாஸ் என் குடும்பத்தை சேர்ந்த யார் காலடியும் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தை தொடாது என்றும் அப்படி யாராவது என் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தால் சவுக்கால் அடியுங்கள் என்றார். ஆனால் நடந்தது என்ன என்று உலகிற்கே தெரியும். இப்படி எல்லாம் வெற்று சவடால் அடிக்காமல் நாளை நடப்பது என் கையில் இல்லை என்று ரஜினி சொல்வதில் குற்றம் கண்டுபிடிக்கிறார் இந்த உத்தமர்.

இன்று வழக்கறிஞராக- தொழிலதிபராக- இன்னும் பல தொழில்களில் இருக்கும் பலரும் திட்டமிட்டு வந்தவர்களைவிட சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வந்து தங்களது உழைப்பாலும் தளராத முயற்சியாலும் வென்றவர்கள் தான் அதிகம்;. இவ்வளவு ஏன் இன்றைக்கு பத்திரிக்கை துறையில் உச்சாணிக்கொம்பில் இருக்கும் பலரும் கூட ஒரு காலத்தில் வயிற்று பிழைப்பிற்கு ஒரு தொழில் என வந்து வெற்றி பெற்றவர்கள் தான். அதே போல் ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் போது பலரும் சொல்லிய காது புளித்து போன லட்சியம் ‘ நான் டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்வேன்’ என்பது தான். ஆனால் இப்படி சொன்னவர்கள் பலரும் டாக்டராக வில்லை என்பதும்- அப்படியே டாக்டர் ஆனாவர்களில் பலரும் ஏழைகளுக்கு சேவை செய்யவில்லை என்பதும் நாடறிந்த உண்மை. பத்தாம் வகுப்பில் சாதாரண மதிப்பெண்கள் பெற்று ஏதோ ஒரு உத்வேகத்தில் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று மருத்தும் படித்த பல டாக்டர்களை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். எனவே உறுதியாக சொல்வதும் அதனை செயல்படுத்துவம் யாராலும் முடியாது.

இவ்வளவு ஏன் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் ‘ அன்புமணியாகிய நான்’ என்று முதல்வர் பதவியேற்றது போல் லட்சக்கணக்கான போஸ்டர்களை மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் ஒட்டி- தமிழகத்தின் அனைத்து முண்ணனி நாளிதழ்களிலும் முழுபக்க விளம்பரம் கொடுத்த பா.ம.க.வால் ஏன் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. நீங்கள் உறுதியாக பதவி ஏற்போம் என்று சொன்னதையும்- என் குடும்பத்தில் இருந்து யாரும் பதவிக்கு வர மாட்டார்கள் என்ற இரு வாக்குறுதியையும் ஏன் செய்யவில்லை என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் பாலு. எனவே கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிய வேண்டாம்.

அந்த பேட்டியில்  பாலு மேலும் சொல்கிறார்’ கடந்த 22 வருடங்களில் ரஜினி 22 படங்கள் நடித்து ( படங்களில் பெயர் பட்டியலை அப்படியே வாசித்தார்) சராசரியாக 500 கோடி ரூபாய் சம்பாதித்து விட்டார். தற்போது படத்தின் வியாபாரத்திற்காக இந்த சந்திப்பு ‘ என்கிறார். படத்தின் வியாபாரத்திற்காக ரஜினி ரசிகர்களை சந்திக்கிறார் என்றால் நீங்கள் பட்டியலில் வாசித்த 22 படங்களின் வெளியீட்;டின் போதும் ரஜினி ஏன் ரசிகர்களை சந்திக்க வில்லை. இவ்வளவு ஏன் குசேலன் என்ற தோல்வி படம் வந்த பிறகு கூட தனது மார்க்கெட்டை நிலை நிறுத்த அடுத்த பட வெளியீட்டின் போது ரசிகர்களை சந்திக்கவில்லையே அந்த காரணத்தையும் பாலு கூறலாமே. ரசிகர்களை நடிகர் சந்தித்தால் வியாபாரம் உயரும் என்றால் தினந்தோறும் தனது ரசிகர்களை சந்தித்து கொண்டிருக்கும் சரத்குமாருக்கும், நடிகர் பிரபுவிற்கும் இன்னும் பல நடிகர்களுக்கும் என்ன வியாபாரம் என்பதை இந்த வியாபார காந்தம் ( பிசினஸ் மேக்னட்) சொன்னால் நன்றாக இருக்குமே.

அடுத்து ஒரு கேள்வி. ரஜினிக்கு தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகள் குறித்து என்ன தெரியும். தமிழகத்தின் முதலமைச்சாரக 17 வருடங்கள் இருந்தாரே ஜெயலலிதா அவருக்கு நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து இறக்கும் வரையில் என்ன தெரியும். கருணாநிதி என்ன சொன்னாலும் அதை அப்படியே மறுப்பது தவிர என்ன தெரியும் என்று நீங்கள் மூன்று முறை ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டீர்கள். இதில் எந்த விசயத்தில் விஜயகாந்த் அறிவாளி என்று அவருடன் கூட்டணி வைத்து அன்புமணி தர்மபுரி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இதில் எந்த பிரச்சினையில் நீங்கள் முதலமைச்சராக முன்னிறுத்தும் அன்புமணி கையில் குறிப்புகள் இல்லாமல் பேசுவார் என்பதை தெரிவிக்க முடியுமா.

இன்னொரு குற்றச்சாட்டு, தவறானவர்கள் விலக சொல்வது நடிப்பாம். ஒரு கட்சி ஆரம்பிக்க கொள்கையைவிட பணக்காரனும்- ரவுடியும் தான் முக்கியம் என்று சொல்லப்படும் சூழ்நிலையில் மக்கள் பணத்தை சாப்பிடும் ஆசை உள்ளவர்கள் விலகி விடுங்கள் என்று கூறியது ஒரு தேசதுரோகம் என்ற லெவலில் கூறுபவர்களின் தகுதியை மக்கள் பார்த்து கொண்டு தான் உள்ளனர். இதை விட கொடுமை தன்னை முழுமேக்கப்பில் பார்த்து ரசிகர்கள் ஆனவர்களை எந்த மேக்கப்பும் இல்லாமல் சேவிங்க கூட செய்யாமல் நரைத்த தாடியுடன் இது தான் நான் இப்படி தான் ஒரிஜினலாக இருப்பேன் என்று வந்த ரஜினி சிறந்த நடிகர் என்றால் தேர்தல் பிரச்சாரத்திற்கே தனியார் விளம்பர கம்பெனி சொன்ன இடத்தில் நின்று திரும்ப வேண்டிய இடத்தில் திரும்பி ஒரு சினிமா சூட்டிங் போல பிரச்சாரம் செய்த அன்புமணி எப்படிபட்ட நடிகர் என்பதை விளக்க பாலுவிடம் வார்த்தைகள் இல்லை என்றால் அவர்களது தலைவர் டாக்டர் ராமதாசிடமோ அல்லது அன்புமணியிமோ வார்த்தைகளை கடன் பெற்று சொல்லட்டும். தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு புதிய வார்த்தையை தெரிந்து கொள்ளட்டும்.

இன்னொருத்தர் ஒரு வீடியோ அனுப்பி இருக்கிறார். ரஜினி தமிழர்களின் காசில் சொகுசாக இருக்கிறாராம். தமிழகத்தின் தொழில் செய்து சம்பாரித்த சரவணபவன் ஓட்டல் முதலாளி முதல் தினத்தந்தி அதிபர் வரை அனைவரும் தமிழர்களின் காசில் தான் சொகுசாக உள்ளனர். இவ்வளவு ஏன் சென்னையில் ஆட்டோ ஓட்டுபவர் கூட தமிழர்களின் காசில் தான் வாழ்கிறார். இந்த கேள்வியை அனைவரிடமும் கேட்கலாமே. படம் பிடித்து இருந்து மக்கள் வந்து பார்த்தால் தான் காசு கிடைக்கும். சினிமாவில் இருந்ததாலேயே மக்கள் காசை சாப்பிடுகிறார் என்றால் ஏன் வருடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைகின்றனர் என்பதை விளக்கலாமே. மக்களை பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி பணம் வாங்கினார் என்றால் சுட்டு விரல் நீட்டுங்கள். மற்றபடி இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் அவரின் வெற்றி கண்டு நீங்கள் வைத்த பொறாமை பொங்கல் தானே தவிர வேறொன்றும் இல்லை.

ரஜினி எப்போது ரசிகர்களை பார்த்தாலும் உங்கள் குடும்பதை பாருங்கள். உங்கள் பெற்றோரை பார்த்துக்கொள்ளுங்கள் என்று தான் அறிவுரை கூறுவார். ஒரு மூன்றாவது மனிதரால் அறிவுரை தான் கூற முடியும். எனவே ரஜினியை குறை கூறுபவர்கள் யாருடைய வெற்றியையும் ஏற்றுக்கொள்ள மனமில்லாத மனநிலை பிறழ்வு உடையவர்கள் என்பதை ஒரு நல்ல மனநல மருத்துவரை நிச்சயம் கண்டு பிடித்து விடுவார்- இப்படிக்கு பொறமையற்ற தமிழகத்தையும்- தமிழனையும் காண விரும்பும் உண்மை தமிழன்.


இப்படி ஒரு கட்டுரை நமது மின்னஞ்சலுக்கு வந்துள்ளது. அதனை அப்படியே பிரசுரித்து உள்ளோம். இதற்கு மாற்று கருத்து உள்ளவர்கள் அதனை அனுப்பினால் அதனையும் அப்படியே பிரசுரிப்போம். மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.


 

One thought on “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *