News by Hello Asia News Service, Canada

சாய்பாபா நினைவேந்தலில் பங்கேற்ற TISS மாணவர்கள் விவகாரம்

மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அண்மையில் நடந்த ஒரு விசாரணை, சட்ட எல்லைகளைத் தாண்டி ஜனநாயகத்தின் அடிப்படைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னாள் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதாகக் கூறி, டாடா சமூக அறிவியல் நிறுவனத்தைச் (TISS) சேர்ந்த ஒன்பது மாணவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு, தற்போது கருத்துரிமை, அரசியல் விழிப்புணர்வு மற்றும் நீதித்துறையின் அணுகுமுறை குறித்து பரபரப்பான விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இந்த வழக்கில், மாணவர்களை உடனடியாக கைது செய்யாமல் இடைக்கால பாதுகாப்பு வழங்கிய கூடுதல் செஷன்ஸ் நீதிபதி மனோஜ் பி. ஓசா, அதே நேரத்தில் மாணவர்களை கடுமையான சொற்களால் எச்சரித்துள்ளார்.

“உங்கள் பெயர்கள் இப்போது காவல்துறையின் பதிவுகளில் உள்ளன. உங்கள் தொழில் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே அதை நீங்களே அழித்துக்கொண்டீர்கள்,” என அவர் தெரிவித்த கருத்துகள், சட்ட அறிவுறுத்தலா அல்லது மனஅச்சுறுத்தலா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

“அரசு வேலை கிடைக்காது. தனியார் நிறுவனங்களில் பணியமர்ந்தாலும் இந்த வழக்கை வெளிப்படுத்த வேண்டிய நிலை வரும். சமூக சேவை பட்டங்கள் உங்களுக்கு வேலை தராது,” போன்ற கருத்துகள், நீதிமன்ற மேடையில் சொல்லப்பட வேண்டியவையா என்பதும் கேள்விக்குறியாகிறது.

நிகழ்வின் பின்னணி

2025 அக்டோபர் 12 அன்று, TISS வளாகத்தில் நடைபெற்ற சாய்பாபாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து, மும்பை ட்ராம்பே காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக மாணவர்களின் செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

2017-ல், தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, சாய்பாபாவுக்கு அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. ஆனால், 2024 மார்ச் 5 அன்று, பம்பாய் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர தேவையான அனுமதி முறையாகப் பெறப்படவில்லை என உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

அப்படியானால், உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஒருவரின் நினைவாக நிகழ்வு நடத்துவது, தானாகவே குற்றமாக மாறுமா?

நினைவேந்தலும் குற்றமாகுமா?

ஒருவரின் மரணத்திற்கு நினைவஞ்சலி செலுத்துவது, இந்திய ஜனநாயகத்தில் தடை செய்யப்பட்ட செயல் அல்ல. அந்த நிகழ்வில் வன்முறை, ஆயுதப் பிரச்சாரம் அல்லது நாட்டுக்கு எதிரான வெளிப்படையான அழைப்புகள் இருந்ததாக நிரூபிக்கப்படாத வரை, அதை ‘தேசவிரோதம்’ என்ற சட்டக் கண்ணோட்டத்தில் பார்க்க முடியுமா?

மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வுடன் இருப்பதும், சமூக விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதும் குற்றமல்ல. கருத்துரிமையைப் பயன்படுத்தியதற்காகவே, “உங்கள் வாழ்க்கை முடிந்தது” என்ற முன்கூட்டிய தீர்ப்பை வழங்குவது, நீதியின் அடிப்படை தத்துவத்திற்கே எதிரானதாகத் தெரிகிறது.

அரசிடம் கேட்க வேண்டிய அடிப்படை கேள்வி

மேலும், இந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு முக்கியமான கேள்வியை அரசு தரப்பிடமும், மத்திய அரசிடமும் எழுப்பியிருக்க வேண்டியது.
சாய்பாபாவின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பதும், அவரது நினைவாக மனு (memorandum) வாசிப்பதும் மட்டும், அரசுக்கு எதிரான பெரிய சதி அல்லது நாட்டுக்கு எதிரான செயலாக எப்படி மாறுகிறது?

வார்த்தைகளும் கருத்துகளும் ஆயுதங்களாக மாறாத வரை, அவற்றை குற்றமாக மாற்றும் எல்லை எங்கே தொடங்குகிறது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் இல்லையா?

ஒரு நினைவேந்தலில் கலந்துகொண்டதற்காகவே இளைஞர்களின் மொபைல், லேப்டாப் பறிமுதல் செய்யப்படுகிறதென்றால், நாளை எந்தக் கல்லூரி வளாகமும் “அமைதி மண்டலம்” அல்ல; “சந்தேக மண்டலம்” ஆக மாறும் அபாயம் உள்ளது.

நீதியின் பங்கு எது?

நீதிமன்றம் எச்சரிக்கை விடுக்கலாம். ஆனால், அந்த எச்சரிக்கை இளம் தலைமுறையின் எதிர்காலத்தை அச்சத்தில் ஆழ்த்தும் விதமாக இருக்க வேண்டுமா?
நீதித்துறை தண்டனை வழங்குவதற்காக மட்டுமல்ல; அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் உள்ளது.

இந்த வழக்கு, “நாட்டுப்பாதுகாப்பு” என்ற பெயரில் கருத்துரிமை குறுக்கப்படுகிறதா என்ற கேள்வியை மீண்டும் எழுப்புகிறது. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையிலேயே, மாணவர்களின் தொழில் வாழ்க்கை முடிந்தது என நீதிமன்றமே கூறுவது, ஜனநாயகத்தின் ஆரோக்கிய அறிகுறியா?

By