நமது நிருபர், சென்னை:
திராவிட மாடல் என்று மார்தட்டி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, உண்மையில் பாஜகவின் ஏ டீம் போலவே செயல்படுகிறது! தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அடக்கி, ஒடுக்கி, தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது எந்த வகையில் திராவிட மாடல்? பாஜகவின் பிரைவேட்டைசேஷன் கொள்கையை அப்படியே பின்பற்றி, ரயில்வே, இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா போன்றவற்றின் தனியார்மயத்தை வெளியில் எதிர்ப்பது போல் நடித்து, உள்ளுக்குள் தூய்மைப் பணியை தனியார் கைகளுக்கு தள்ளி விடுவது ஏன்? விஜயின் TVK , AMMK கட்சிகளை பாஜகவின் “B” டீம் என்று குற்றம்சாட்டும் திமுக, தானே பாஜகவின் “A” டீம் போல மாறிவிட்டதா? மாநில கல்விக் கொள்கையை கூட சொந்தமாக இயற்றாமல், ஒன்றிய பாஜக கொள்கையை மறுவடிவமைப்பு செய்தது ஏன்? இந்த அநீதியைப் பார்த்து, திமுகவின் சொந்த ஆதரவாளர்களே குமுறுகிறார்கள்! இப்படியே போனால், தூய்மைப் பணியாளர்களின் விளக்குமாறால் திமுக ஆட்சியை துடைத்து விடுவார்கள்!

செல்வத்தை தேய்க்கும் படை!


அசல் கூலிகள் தெருவில் நின்று போராடுகிறார்கள். 200 கோடி கூலி பெறுபவர் ரஜினி, லோகிக்கு 50 கோடி கூலியாம். துப்புறவுத் தொழிலாளர்களின் முழக்கத்தை மறைக்கிறது ‘மோனிகா, மோனிகா’ குத்துப்பாட்டு. அனிருத்துக்கு கூலியை அள்ளித்தருகிறார் கலாநிதி மாறன். இத்தகு காஸ்ட்லி கூலிகளை பார்த்து மகிழ்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஆனால், புயல், மழை, பெருவெள்ளம், கோவிட் காலங்களில் அழுக்கை அள்ளி சென்னையை சுத்தம் செய்த எளிய மக்கள், சோறு இன்றி, தூக்கம் இன்றி, நிர்கதியாய் நடுத் தெருவில் நின்று போராடுகிறார்கள். அவர்களின் கண்ணீரால் உங்கள் இதயக் கதவைத் தட்டுகிறார்களே! திறக்க மாட்டீர்களா மிஸ்டர் சி.எம்?

எம்.என். ராஜம் என்ற பழம் பெரும் நடிகை முதல்வரைக் காண விரும்பி காணொலி பதிவிடுகிறார். மறுநாள் அவர் வீட்டின் கதவைத் தட்டுகிறார் முதல்வர். ஆனால், ஏழைத் துப்புறவுத் தொழிலாளிகள் தம் கண்ணீரால் உங்கள் இதயக் கதவைத் தட்டும்போது ஏன் மௌனம்? தூய்மைப் பணியை Urbaser Sumeet, மற்றும் ராம்கி என்விரோ Ramky Enviro Engineers Limited போன்ற தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க முயல்கிறது திராவிட மாடல் அரசு. இதற்கு 276 கோடி ஒப்பந்தம் எதற்கு? பிறகு எதற்கு மாநகராட்சிக்கு மேயர்? பெரு நகர் வளர்ச்சிக்கு அமைச்சர்? கார்ப்பரேஷனை பராமரிக்கும் பொறுப்பை அம்பானி, அதானி, கலாநிதி மாறன் போன்ற பணக்காரர்களிடம் கொடுத்துவிடலாமே?
13 நாள் தொடர் போராட்டத்தில் ஒழுங்கமைவும், கட்டுப்பாடும், இரவு பகல் என குடும்பத்தைத் துறந்து அமர்ந்திருந்த பெண்களின் மன உறுதியும் வியப்பில் ஆழ்த்தியது. இவர்கள் இயற்கை உபாதைகளை எப்படி சமாளித்திருப்பார்கள்? சம்பள இழப்பையும், தினசரி உணவு செலவையும் எப்படி ஈடுகட்டியிருப்பார்கள்? இதுவல்லவா பட்டாளி வர்க்கத்தின் அசல் போராட்ட குணம்! ஆனால், இந்த தார்மீக போராட்டத்தை பொதுமக்களுக்கு இடையூறு என வழக்கு போட்டு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டது துரதிர்ஷ்டவசமானது. நீதிமன்றத்தில் இருந்து பத்து நிமிட பயணத்தில் போராட்ட இடத்திற்கு வந்து உண்மையை உறுதிப்படுத்த முடியும். ஆனால், வடிகட்டிய பொய்யின் அடிப்படையில் போராட்டத்தை தடை செய்தது வேதனைக்குரியது.
நமது அரசியல் சட்டம் மக்களுக்கு போராடும் உரிமையை வழங்கியுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் உழைப்பிற்கு நியாயமான கூலி கோர உரிமையுள்ளது. இதை மீறி நீதிபதி தடை விதித்தது எளியோருக்கு இழைக்கப்பட்ட அநீதி! ஆட்சியாளர்கள் மக்களிடம் கெட்ட பெயர் வராமல், நீதிமன்றம் வழியே இந்த அராஜகத்தை சூட்சுமமாக செய்கிறார்கள். கைது செய்யப்பட்ட தாய்மார்களின் கதறல், கண்ணீர், மயக்கத்தில் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைத்தன. சமூக ஊடகங்களில் தோழர்கள் வளர்மதி, நிலவு மொழி போன்றோர் நேரலை செய்து ஆதரவு தந்தபோதும், அவர்கள் காவல்துறையால் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது.
தனியாருக்கு தரகு வேலை பார்ப்பதற்காகவா ஆட்சிக்கு வந்தீர்கள்? வாய் திறந்து பேசாத, பேச்சுவார்த்தைக்கு தகுதியற்ற முதலமைச்சருக்கு ஆட்சி எதற்கு? அதிகாரம் எதற்கு? நள்ளிரவு கைதுகள், நாலாந்தரத் தந்திரங்கள், இல்லாதோர் வயிற்றில் அடிக்கும் சூழ்ச்சிகள்! எங்கோ ஆந்திராவில் உள்ள கார்ப்பரேட் ரெட்டிகாரர்கள் சம்பாதிக்க, நம் மண்ணின் பெண்கள் தாக்கப்படுவது நியாயமா? டாஸ்மாக், குவாரிகள், பொதுப்பணித் துறை, சாலைப் பணிகளில் சம்பாதித்து கொழுப்பது போதாதா? ஏழைகளை ஒப்பந்ததாரருக்கு விற்று கமிஷன் பார்க்காவிட்டால் என்ன குறைந்து விடும்? ‘திமுக ஆட்சியில் நாம் பாதுகாக்கப்பட்டோம்’ என்று தூய்மைப் பணியாளர்கள் நன்றி பாராட்டியிருப்பார்களே!
மேயர் பிரியா, “தனியார் நிறுவனங்கள் மூலம் பிஎஃப், இ.எஸ்.ஐ, ஹெல்த் இன்சுரன்ஸ், போனஸ், குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை, பண்டிகை பரிசுகள் வழங்கப்படும்” என்கிறார். ஆனால், இது பொய்! கடலூர் மாநகராட்சியில் சிட்டி கிளீன் என்ற நிறுவனம் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை, பிஎஃப் பிடித்தம் குறித்த சான்று கொடுக்காமல் ஏமாற்றுகிறது. கோவை மேட்டுப்பாளையம் காரமடை நகராட்சியில் பிரணவ் செக்யூரிட்டி மேன் பவர் சர்வீஸ் நிறுவனம் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதாக போராட்டம் நடக்கிறது. தனியார் நிறுவனங்களை நம்புவது தற்கொலைக்கு சமம்!
13 நாள் போராட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மௌனம் காப்பது அவரது கள்ள உள்ளத்தை காட்டுகிறது. போராடுவோரை நேரில் எதிர்கொள்ள துணிவின்றி, அதிகார பலத்தால் அடக்குவது கோழைத்தனம். கம்யூனிஸ்டுகள், வி.சி.கே அமைப்புகள் ஒரு நாள் வாழ்த்திவிட்டு சென்றது முறையல்ல. சின்மயி, மதுவந்தி, அம்பிகா போன்றோர் ஆதரவு தந்ததை வைத்து திமுக ஆதரவாளர்கள் போராட்டத்தை களங்கப்படுத்துகிறார்கள். மனசாட்சியுள்ள திமுகவினர் தங்கள் தலைமைக்கு நிர்பந்தம் செய்ய வேண்டாமா?
தூய்மைப் பணி நிரந்தரமானது. தினசரி நடந்தாக வேண்டியது. ஊழியர்கள் வெளிநாடுகளைப் போல கண்ணியமான சம்பளத்துடன் கௌரவமாக நடத்தப்பட வேண்டும். காண்டிராக்ட், பிரைவேட்டைசேஷன், அவுட்சோர்சிங் போன்ற உழைப்பு சுரண்டல்கள் முடிவுக்கு வர வேண்டும். திமுகவின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக, அவர்களின் ஆதரவாளர்களே கோபம் கொள்கிறார்கள். இப்படியே தொடர்ந்தால், தூய்மைப் பணியாளர்களின் விளக்குமாறால் திமுக ஆட்சியை துடைத்து விடுவார்கள்!
