அம்பாள் என்றைக்கடா பேசினாள்?!

ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்?!

இதுபோன்ற நாத்திக வரிகளை மக்களிடம் கடவுள் ஒரு உருவகமே என்பதை நிலைநாட்ட அவ்வப்போது கருணாநிதி கூறிய வசனங்களில் ஒரு சில. அவரது இளமைக்காலம் தொட்டு மேடைதோறும் முழங்கிய வசனங்கள், கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களையே கடுப்பேற்றும் வசனங்களாக இருந்திருக்கும்.
ஆனால் ஸ்டாலினோ அவ்வாறு எங்கும் அப்படி பேசியதாக நினைவில் இல்லை. விபூதி, குங்குமத்தை பொதுமக்கள் முன்னிலையில் அழித்துக் கொண்டார் என்பதை தவிர.
ஆனால் தந்தையும், மகனும் பொதுவெளியில் எவ்வளவுதான் நாத்திகக் கருத்துகளைக் கூறினாலும், செய்தாலும் அவர்களது குறையாக ஆன்மீக நபர்கள் கூறுவது, முதலில் அவர்களது வீட்டில் உள்ளோரை திருத்தட்டும் என்பதே. கருணாநிதியின் மனைவியர் திருமதி (மறைந்த ) பத்மாவதி அம்மாள், திருமதி தயாளு அம்மாள், திருமதி ராசாத்தி அம்மாள் அவர்கள் அன்று முதல் இன்று வரை ஆன்மீகப் பாதை, கடவுள் வழிபாடு என எதையும் நிறுத்தவில்லை. திரு. ஸ்டாலின் அவர்களின் மனைவி திருமதி துர்கா அவர்களோ
கருணாநிதியின் மனைவியரை விட ஆன்மீக நம்பிக்கையில் அதிகம் நம்பிக்கை கொண்டவராகக் நடந்து வருகிறார். ஒருவேளை சமீபத்தில் சாமியார் ரவிசங்கர் அழைத்த கந்தசஷ்டி கவச பாராயணத்தில்கூட கலந்து கொண்டிருப்பார்! அவ்வளவு பக்தி! தவறில்லை. அவருக்கு விளங்க வைக்க அவரது அரசியல்வாதி கணவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை.
எனது திருமணம்
15 வருடங்களுக்கு முன் எனக்கு பெண் பார்க்க ஆரம்பிக்கலாம் எனும் போதே எனது கண்டிசன் மூன்று மட்டுமே. ஒன்று, சாதி மறுப்பு, இரண்டு, சாதக புரட்டு மறுப்பு, மூன்றாவது புரோகித மறுப்பு திருமணம். அவ்வளவுதான். என் பெற்றோர் இதனை ஏற்றுக்கொண்டு பெண் தேடுவதை சொந்தத்தில் தேடும் போது எனது கண்டிசனுகளுக்கு வாய்ப்பில்லை என்பதால் இணையத்தில் தேடுதல் துவக்கம். முதல் வரனே எனக்கு அமைந்தது அற்புதமாக இருந்தது. பெண் பார்க்கும் படலத்திற்கு முன்பே எமது மூன்று கண்டிசன்களும் அவர்களிடம் பகிரப்பட்டு அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்.
அதிர்ச்சி
பெண்வீட்டில் பெண் பார்க்கும் போது அவர்களது வீடு இறை நம்பிக்கையில் ஊறியவர்களாக இருந்ததைக் கண்டு ஒரு அதிர்ச்சி. ஆனால் அவர்கள் எங்களுக்கு ஜாதகம் நம்பிக்கையில்லை, சாதியிலும் நம்பிக்கையில்லை, புரோகித மறுப்பும் ஏற்றுக் கொள்கிறோம், நல்லப் பையன் வேண்டும். இவைகளில் நம்பிக்கையில்லாதவருக்கு தன்னம்பிக்கை நிறையவே இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் உங்களை அழைத்துள்ளோம் என்றனர். அவர்கள் பேச்சு பிடிக்க, சில வாரங்களிலேயே நிச்சயம், பிறகு ஒரு மாதத்திலேயே திருமணம் நடந்தது. பெண்வீட்டாரது நம்பிக்கையானது அவர்களது பெண் என்னை ஆத்திகராக மாற்றிவிட முடியும் என்றிருந்துள்ளனர். ஆனால் என் மனைவியோ என்னை கடவுள் நம்பிக்கை கொள்ளும்படி கேட்டதே இல்லை. நானும் அவரது நம்பிக்கை குறித்து எதுவும் தவறாக பேசவில்லை. நான் எனது வீட்டில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி எழுதிய புத்தகங்கள், காணோளிகள், உரைகள் போன்றவைகளை அவ்வப்போது படிப்பதும், அது மட்டுமின்றி பக்தி நூல்கள் அனைத்தும் என்னால், என் அப்பாவால், என் அம்மாவால், என் உடன்பிறந்த சகோதர்களால் படிக்கப்பட்டு புரியாத, சந்தேகத்துக்குரிய அனைத்தும் அடிக்கோடிடப்பட்டிருக்கும். அவற்றை எடுத்து படிக்க முற்பட்ட எனது மனைவி அவைகள் குறித்து கேள்வி எழுப்பினார். அவருக்கு அந்த அடிகோடிட்டப்பட்ட இடங்கள் அனைத்துக்கும் எங்களால் விளக்கப்பட்டது. எங்களது விளக்கம் திருப்தி இல்லையெனில் இணையத்தில் தேடிப் பார்த்தார். ஒரு வருடம், இரண்டு வருடம், வெளிநாடு வாழ்க்கை, வாரமொருமுறை கோயிலுக்குச் செல்வது, சனியன்று வழிபாடு என போய்க் கொண்டே இருந்த எனது மனைவி என்னிடம் பேசும் போது நிறைய கேள்விகள் கேட்பார். படித்த புராண, இதிகாசங்கள், கடவுள் என அனைத்திலும். அவரது கோயிலுக்கு செல்லும் பழக்கம் குறைந்தது, வீட்டிற்க்குள் இருக்கும் கடவுள் படங்களை வணங்கும் முறை குறைந்தது. கடவுள் குறித்த விமர்ச்சனங்களை என்னிடம் பகிர ஆரம்பித்தார். மாறியது மனம்.
புதிய வீடு வாங்கினோம். புரோகிதர் இல்லை, அனைத்து நாளும் நல்ல நாளே, எல்லா நேரமும் நல்ல நேரமே என்ற தெளிவான சிந்தனையில் அவர் இருந்தார். என்னை விட தெளிவான சிந்தனை. ஒரு தனியார் அலுவலகத்தில் பணி, இரண்டு அழகான ஆண் குழந்தைகள், அவர்களுக்கு கடவுள் குறித்தோ, வழிபாடு குறித்தோ ஏதும் சொல்லாமல், யார் யாரிடம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும் சுயமரியாதை என்றால் என்ன என்பதையும் அவர்களுக்கு வயதுக்கு தகுந்தார்போல சொல்லி வளர்த்து வருகிறார். அக்கம் பக்கமும் மற்ற சொந்தங்களும் மிகுந்த ஆச்சர்யப்படும் படி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். மனம் பயந்தால் அங்கு கடவுள் வருவார். இறப்பும் பிறப்பும் கடவுள் நம்பிக்கையாளர்க்கும், நம்பிக்கையில்லாதவருக்கும் பொதுவே. பயந்து வாழ்தல் தவிர்த்து, திடமான மனதுடன் நல்ல எண்ணங்களுடன் பிறருக்கும் நன்மை செய்து வாழ்ந்து மறைதலே நலம். ஆகவே கேள்வி கேட்டாலே உன் அறிவு வளரும், ஆன்மீகம் மறையும். இதை திரு. கருணாநிதி அவர்களும் அவரது மகன் திரு. ஸ்டாலின் அவர்களும் அவர்களது மனைவியருக்கு வாய்ப்புகள் கொடுத்து தட்டி கொடுத்து சொல்லி கொடுத்திருப்பார்களானால் ஆன்மீகவாதிகளின் பழிச் சொல்லில் இருந்து மீண்டிருக்கலாம்.
-ப.ராசகோபால், கனடா
