செய்தியாளர், கனடா

டொரண்டோ: கனடாவின் டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 2023ஆம் ஆண்டு நடந்த வரலாறு காணாத பெரும் தங்க கொள்ளை வழக்கில் மற்றொரு முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பீல் பிராந்திய போலீசார் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 43 வயதான அர்சலான் சௌத்ரி என்ற நபர் துபாயிலிருந்து டொரண்டோ வந்த விமானத்தில் இறங்கியதும் போலீசாரால் பிடிபட்டார்.

இவர் மீது 5,000 டாலருக்கு மேல் திருட்டு, குற்றத்தால் கிடைத்த பொருள் வைத்திருந்தல் (இரு குற்றச்சாட்டுகள்), மற்றும் குற்றச் சதி ஆகிய கடுமையான பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பிணை விசாரணைக்காக அவர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

படம்: கைது செய்யப்பட்ட அர்சலான் சௌத்ரி

பீல் போலீஸ் தலைவர் நிஷான் துரையப்பா வெளியிட்ட அறிக்கையில், “சர்வதேச போலீஸ் கூட்டுறவுடன் செயல்பட்டு இந்த சிக்கலான குற்றச் செயலை தடுத்துள்ளோம். எங்கு ஓடினாலும், எங்கு ஒளிந்தாலும் நாங்கள் உங்களை கண்டுபிடிப்போம் என்று தெரியப்படுத்துகிறோம்!” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் 17, 2023 அன்று சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலிருந்து வந்த விமானத்தில் 400 கிலோ தங்கம் (அப்போதைய மதிப்பு 2 கோடி டாலருக்கு மேல்) மற்றும் சுமார் 25 லட்சம் டாலர் வெளிநாட்டு நாணயம் கொண்ட சரக்கு கொள்ளையடிக்கப்பட்டது. அடுத்த நாளே இது காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதுவே கனடா வரலாற்றில் இதுவரை நடந்த மிகப்பெரிய தங்க கொள்ளை என போலீசார் கூறுகின்றனர்.

இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த அர்சலான் சௌத்ரி முக்கிய திட்டமிடுபவராக இருக்கலாம் என சில ஆதாரங்கள் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், பிராம்டன் நகரைச் சேர்ந்த 27 வயது ஒருவருக்கு அமெரிக்காவில் துப்பாக்கி கடத்தல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட உள்ளது. முன்னாள் ஏர் கனடா ஊழியர் உட்பட இருவர் இன்னும் தப்பியோடி உள்ளனர்; அவர்களுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளையின் மொத்த மதிப்பு 225 லட்சம் டாலர்கள் வரை இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து சர்வதேச அளவில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

By