Opinion: MK Stalin has to defeat J Jayalalithaa in Tamil Nadu elections to  snatch power, 4 years after her death - India Ahead

மாரிதாஸ் கைது  சம்பவம் உணர்த்துவது என்ன என அலசினால் கிடைப்பது என்ன என்பதை பார்ப்போம்.

 மாரிதாஸ் என்ற தனிநபர் ஒருவர் கடந்த சில வருடங்களாக “தன் கருத்துக்களை” சமூக வலைத்தளங்ககளில் பேசியும், எழுதியும் வருகிறார். அவரது ஒரு கருத்து அல்ல பல கருத்துகள் வெகு பலருக்கும் பிடிக்காமலும், வெகு பலருக்கு பிடித்தும் இருக்கிறது. ஒரு தனிப்பட்ட நபர் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக தமிழக காவல்துறை அதாவது அந்தத் துறைக்கு பொறுப்பு வகித்திருக்கும் அவரது கட்சி தொண்டர்களுக்கு தளபதியாக, தமிழக மக்களுக்கு முதல்வராக வலம் வரும் ஸ்டாலின் அவர்களின் அரசு கைதும் செய்திருக்கிறது.

இந்த மாரிதாஸ் என்பவர் ஒரு தனி நபர், பல்வேறு சமூக வலைதளங்களான முகநூல், ட்விட்டர், மற்றும் யூட்டூயூப் இன்னும் பிற ஊடகங்கள் மூலமாக பொது சமூகத்தால் பார்க்க, படிக்கக் கூடிய தளங்களில் தன் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இவர் இதற்க்காக தமிழக, அல்லது இந்திய ஒன்றிய அரசிடமோ அனுமதியோ அல்லது பதிவோ செய்திருக்கவில்லை.

தினமல*

ஆனால் இந்திய ஒன்றிய அரசிடம் பதிவும் அனுமதியும் பெற்று (RNI)இந்திய ஒன்றிய அரசின், தமிழ்நாடு அரசின் பல்வேறு சலுகைகள் பெற்றும், விளம்பரங்கள் பெற்றும் (தமிழக, இந்திய ஒன்றிய அரசுகளின் தொழிலாளர் சட்டங்களை புறந்தள்ளியும்)

வயிறு வளர்க்கும் ஒரு அச்சு ஊடகம், ஊடகம் எனும் பெயரில் சாதி, மத வெறுப்புகளை மக்கள் மத்தியில் பல்வேறு செய்தி ஆசிரியர்களின் பெயரிலும், பொதுமக்கள் முகமூடிகளை அணிந்து கொண்டும் இந்த ஆகச் சிறந்த தமிழ் சமுதாயத்தின் உள்ளே நச்சுக் கருத்துக்களை வெளிப்படையாகவும், மறைவாகவும் பரப்பி வரும் தேசிய நாளிதழ் என மார்தட்டும் ஒரு செய்தித்தாள், பெரும்பாலான மக்களால் “ தினமல* “ அழைக்கப்பட்டு வரும் இந்த நாளிதழ் செய்தியாளர்கள் மீது கை வைக்கும் துணிச்சல் உண்டா?

நான் மாரிதாஸின் ஆதரவாளன் இல்லை. அவரின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்கும் ஆதரவில்லை. பிறகு ஏன் அவரை கைது செய்தவுடன் கொதிக்கிறேன். 

குற்றவாளி ஜெயலலிதா ஜெயராமன் துணிச்சல்

  1. நவம்பர் 2003

“ இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத அளவுக்கு, புகழ் பெற்ற தேசிய நாளிதழான இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் என்.ராம் உள்ளிட்ட 5 பேர் மற்றும் முரசொலி பத்திரிக்கை ஆசிரியர் செல்வம் ஆகியோரை 15 நாள் சிறையில் அடைக்க சபாநாயகர் காளிமுத்து (நாம் தமிழர் ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்களின் மாமனார்) அதிரடியாக தீர்ப்பளித்தார்.”

Courtesy: Oneindia

  1. நவம்பர் 12, 2004

“காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி நேற்றிரவு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.”

10 Minutes In A Life | Outlook India Magazine
ஜெயேந்திர சரஸ்வதி

Courtesy: Oneindia

தனிப்பட்ட விரோதங்களுக்காக குற்றவாளி ஜெயலலிதா ஜெயராமன் அவர்கள் இந்து ராம், மற்றும் அதன் சில செய்தி ஆசிரியர்களையும் இந்துமத அடையாளம் எனக் காணப்பட்ட சங்கராச்சாரியார்கள் மீதும் கைது நடவடிக்கைகளை துணிச்சலோடு செய்திருந்தார். (அது சரி/தவறு என்ற வாதத்திற்குள் வரவிரும்பவில்லை. பேசினால் ஐட்டம் 2 க்கு நிறைய விளக்கங்கள் கொடுக்க வேண்டிவரும்.) இவைகள் குற்றவாளி ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு சிறு எடுத்துக்காட்டுகள் தான். (கொள்ளை அடிப்பதிலும் அவரது துணிச்சலுக்கு நிகர் யாரும் இல்லை)

இப்பொழுது தளபதியிடம் வருவோம்,

தேர்தல் பிரச்சாரத்திலிருந்தே திமுக தலைமை மற்றும் அதன் தொண்டர்களை இந்து விரோதிகள் எனக்கூறி பல்வேறு மதப் பிரிவினை, சாதிய தாக்குதல்களை பதிவுபெற்ற ஒரு ஊடகம் தினமல* செய்து வருகிறது.  இன்று நேற்றல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமனிதத் தாக்குதல், சாதி, மத மோதல்களை தூண்டிவிடும் படியாக செய்து வரும் தினமல* மீதும் அதன் ஏதேனும் ஒரு செய்தி ஆசிரியர் மீதும் தளபதிக்கு கை வைக்கும் துணிச்சல் இருக்கிறதா?

கைதான மாரிதாஸ், கிசோர் எல்லாம் கண்துடைப்புக்குத்தான் உதவுமே ஒழிய அவர்கள் கைதால் தனிமனித கருத்துரிமைதான் பாதிக்கப்படும். கருத்து கூற அஞ்சும் சமுதாயத்தால் அடிமை சமுதாயமே மிஞ்சும். அதற்க்குதானே ஆசைப்படுகிறீர்கள் தளபதி! அவர்களே!

ஆம் தங்களுக்கு தங்கள் பெயருக்குப் பின் திராவிடன் எனப் போட்டுக்கொள்ளும் துணிச்சல் உண்டு ஆனால் அதேபோல அண்ணா கூறிய ஆட்டுத்தாடியை வலியச் சென்று மதிக்கத் தேவையில்லை என்பதை நீங்கள் உணரும் போது உங்கள் துணிச்சல் வெளியுலகுக்கு தெரிய வரும். 

கட்டுரையாளர்: ஆர். பத்மநாபன், திருச்சி

பொறுப்புத் துறப்பு:

இந்தத் தளத்தில் பதிப்பாகும் எந்தவொரு கட்டுரையும் அந்த கட்டுரை எழுதியவரே பொறுப்பாவார்.

By