
செய்தியாளர் : MS, Canada
மிச்சிகன்:
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் (Michigan Tamil Sangam – MTS) சார்பில் வரும் சனிக்கிழமை பாரம்பரிய சிறப்புகளுடன் ‘தை பொங்கல் விழா’ கோலாகலமாக நடைபெற உள்ளது. அமெரிக்காவில் வாழும் தமிழர்களை ஒரே மேடையில் இணைக்கும் இந்த விழாவிற்கு, மிச்சிகன் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு தை பொங்கல் விழாவை, மிச்சிகன் தமிழ் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முன்னெடுத்து நடத்துகின்றனர். சங்கத் தலைவர் திருமலைஞானம் சிவஞானம், துணைத் தலைவர் ராம்துரை பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜய் வெங்கடசுப்ரமணியன், இணைச் செயலாளர் மிருநாளினி செந்தில்ராஜா, பொருளாளர் அருண் வேலுசாமி ஆகியோரின் தலைமையில்,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜகுமாரி ராஜன், கிரிகுஜலாம்பாள் தில்லை சிதம்பரம், மார்க்கெட்டிங் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் கிருஷ்ணராஜ், இணைய ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி பிச்சை, செயல்பாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஜோ டேவிட், விக்னேஷ் வேலுசாமி உள்ளிட்ட பலர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இதற்குத் துணையாக, பல துணைக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இரவு பகலாக உழைத்து விழாவை வெற்றிகரமாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
விழாவின் சிறப்பாக, தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பாடகர்கள் ஹரிஹரசுதன், லதா கிருஷ்ணா, கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்று, மெகா டியூனர்ஸ் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். பழமையான கிராமிய பொங்கல், பறையிசை , குடும்பங்களுக்கான கலாச்சார நிகழ்ச்சிகள் என விழா முழுவதும் தமிழ்ச் சுவை நிரம்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழை இலையில் பாரம்பரிய முறையில் சைவம் மற்றும் அசைவம் ஆகிய இருவகை உணவுகளும் பரிமாறப்பட உள்ளன.
பல மாதங்களாக இந்த நாளுக்காக காத்திருக்கும் மிச்சிகன் தமிழர்கள், குடும்பத்துடன் வந்து ஒருநாள் முழுவதும் தமிழ்த் திருவிழாவை அனுபவிக்க ஆவலுடன் உள்ளனர். வெளிநாட்டிலும் தமிழர் பண்பாட்டை உயிரோடு காக்கும் இந்த தை பொங்கல் விழா, மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் மற்றொரு பெருமைமிகு முயற்சியாகக் கருதப்படுகிறது.
