பத்மநாபன், கனடா

சென்னை:தமிழக அமைச்சரவையில், பொன்முடி மீண்டும் உயர் கல்வித்துறை அமைச்சரானார். நீதிமன்ற உத்தரவை ஏற்று, நேற்று அவருக்கு சட்ட மேதாவி என பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களால் அறியப்பட்டுவரும் கவர்னர் ரவி அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என, கடந்த டிச., 19ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால், அவர் தன் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
பொன்முடி வெற்றி பெற்ற, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி காலியானதாக, கடந்த 5ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொன்முடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைத்து, கடந்த 11ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், பொன்முடி எம்.எல்.ஏ., பதவி இழந்ததால், திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மீண்டும் எம்.எல்.ஏ.,வான பொன்முடிக்கு, அமைச்சராக பதவியேற்பு செய்து வைக்கும்படி, கடந்த 13ம் தேதி கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.
ஆனால், ‘பொன்முடியை நிரபராதி என நீதிமன்றம் விடுவிக்கவில்லை’ எனக்கூறி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க, கவர்னர் ரவி மறுத்தார். இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முதல்வரின் பரிந்துரையை ஏற்று, பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து, ஒரு நாளுக்குள் உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டது. அதை ஏற்று, அமைச்சராக பொன்முடிக்கு சட்ட மேதாவியும் கவர்னருமான ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று மாலை 3:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில் எளிமையாக நடந்த பதவியேற்பு நிகழ்ச்சி, 7 நிமிடங்களில் நிறைவடைந்தது.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதவியேற்பு முடிந்ததும், அமைச்சர் பொன்முடி, கவர்னர் மற்றும் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்தார். பதிலுக்கு சட்ட மேதாவி / கவர்னர் பூங்கொத்து கொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வர் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்தபோது, அதை பொன்முடிக்கு வழங்கும்படி கவர்னர் தெரிவிக்க, அதன்படி முதல்வர் வழங்கினார். அதன்பின் முதல்வரும், கவர்னரும் கை குலுக்கிக் கொண்டனர்.
உயர் கல்வித்துறை ஒதுக்கீடு
அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடிக்கு, அமைச்சர் ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனித்து வந்த உயர் கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறைக்கு உட்பட்ட தொழிற்கல்வி, எலக்ட்ரானிக்ஸ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கவனிப்பார். அமைச்சர் காந்தி பொறுப்பிலிருந்த கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து, முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
உத்தரவை மீறும் எண்ணமில்லை
பொன்முடிக்கு கவர்னர் ரவி, பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என கவர்னரை அறிவுறுத்தியதுடன், கவர்னருக்கு அவகாசம் அளித்தும் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கவர்னர் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, ”உச்ச நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணம் கவர்னருக்கு இல்லை. பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
அதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பின் ஒத்தி வைத்தனர்.
