-அப்துல் ஹக், ஓமான்

பீகார் தேர்தல் தேதி: பா.ஜ.க. கூட்டணியில் மோதல்.. | Patrikai - Tamil Daily -  latest online local breaking news & reviews - Tamilnadu, India & World -  politics, cinema, cricket, video & cartoon

பீகார் தேர்தலில் மதவெறி சக்திகள் ஆட்சியை பிடிப்பதற்கு உவைஸி காரணமாகி விட்டார் என்று காலங்காலமாக மக்களை ஏமாற்றி வந்தவர்கள் புலம்புவதை காண முடிகிறது.

சில நடுநிலையான எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் கூட பீகாரின் மிகவும் பின்தங்கிய சீமாஞ்சல் பகுதியின் பின்புலம் புரியாமல் அப்படி எழுதுகின்றனர்.

70 ஆண்டுகளாக வார்த்தை ஜாலங்களால் தங்களை ஏமாற்றி சுரண்டியவர்களை சீறிஎழுந்து அடித்துள்ள சீமாஞ்சல் பகுதி முஸ்லிம்களின் சமூக அரசியல் பொருளாதார நிலையையும், விரக்தியில் கொந்தளிக்கும் அவர்களின் மனநிலைக்கேற்ப மிக நுட்பமாக காய் நகர்த்திய உவைஸி அவர்களின் அரசியல் ஆளுமையையும் புரிந்து கொள்ளும் முயற்சி தான் இந்த கட்டுரை.

புர்னியா,கட்டிஹார்,கிஷன்கஞ்,அரோரிய ஆகிய நான்கு மாவட்டங்கள் அடங்கிய சீமாஞ்சல் பகுதி நேபால் மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. நாட்டிலேயே ஏழ்மையும் கல்லாமையும் தலைவிரித்தாடும் பகுதி இது.

முஸ்லிம் சமூகம்:

10 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில் முஸ்லிம்கள் 17 விழுக்காடு வாழ்கின்றனர். பெரும்பாலும் நகரங்களில் தான் வாழ்கின்றனர். சீமாஞ்சலின் 4 மாவட்டங்களிலும் அதிகப்படியான முஸ்லிம்கள் கிராமங்களில் சிறுகுறு விவசாயிகளாகவும் கூலித் தொழிலாளர்களாகவும் வசிக்கின்றனர்.

ஒரு கோடியே பத்து இலட்சம் மக்கள் தொகை கொண்ட சீமாஞ்சல் பகுதியில் ஐம்பது இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அரசு கணக்கின்படி இது தமிழக முஸ்லிம் மக்கள் தொகையை காட்டிலும் கூடுதல்.

சீமாஞ்சல் பகுதி முஸ்லிம்களில் சர்ஜபுரி,குல்ஹய்ய, ஷெர்ஷாபாதி ஆகிய மூன்று பிரிவினர் உள்ளனர்.

இவர்களில் ஷெர்ஷாபாதி என்ற பிரிவினர் இந்தியாவை ஆண்ட ஆப்கன் மன்னர் ஷெர்ஷா (1540 – 1545) அவர்களுடைய படை வீரர்களின் வாரிசுகள்.

இவர்கள் அனைவரும் “அஹ்லே ஹதீஸ்” சிந்தனைப் பள்ளியை சேர்ந்தவர்கள்.அதனால் மற்ற பிரிவினரிலிருந்து எல்லாவற்றிலும் சற்று வேறுபடுத்திக் காட்டிக் கொள்வார்கள்.
(அட ஆண்டவனே….அங்கேயுமா இந்த வியாதி….!)

சுர்ஜபுரி பிரிவினர் கோச் மொழி பேசுபவர்கள்.இவர்கள் தான் சீமாஞ்சல் பகுதி முஸ்லிம்களில் பெரும்பான்மையாகவும் ஓரளவிற்கு செல்வாக்குடனும் வாழ்பவர்கள்.

மூன்றாவதாக உள்ள குல்ஹய பிரிவு முஸ்லிம்கள் எமன் நாட்டின் ஹதரமவுத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். வங்காள சுல்தான்கள் ஆட்சியில் (1352- 1576) கூலிப்படைகளாக (Mercenaries) வந்தவர்கள்.

பிரிட்ஷார் ஆட்சியில் இவர்கள் குற்றப் பரம்பரையாக (Criminal Tribes) கருதப்பட்டவர்கள். பின்னாட்களில் அனைத்து சாதிகளிலிருந்தும் இந்தியப் பெண்களை திருமணம் செய்து கொண்டு இங்கேயே வாழ்ந்து குடும்பங்களாக பெருகியவர்களின் வாரிசுகள். தங்களுடைய அரபு பின்புல பெருமிதத்தை வைத்து மற்றவர்களிலிருந்து தனித்து காட்டிக் கொள்ளும் சமூகவியாதி இவர்களிடம் இருக்கிறது.

சீமாஞ்சல் பகுதியில் இந்த மூன்று பிரிவினர் இடையேதான் அரசியல் அதிகாரப் போட்டிகள் நிலவுகின்றன.

கல்வி :

கல்வியில் நாட்டிலேயே பின்தங்கிய மாநிலமான பீகாரில் சீமாஞ்சல் பகுதி மக்களை இன்னமும் 1950 களின் பிற்போக்கு நிலையிலேயே வைத்திருப்பதில் காங்கிரஸ் JD RJD உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் அபார சாதனைகள் நிகழ்த்தியுள்ளன.

பீகாரின் சராசரி கல்வியறிவு 64 விழுக்காடு. சீமாஞ்சல் பகுதியின் கல்வியறிவு வெறும் 35 விழுக்காடு மட்டுமே. முழு ஆசியாவிலும் கல்வி அறிவற்ற பகுதி என்று அறியப்பட்ட பொதியா என்ற ஊர் சீமாஞ்சலில் தான் உள்ளது.

காங்கிரசின் ஓட்டு வங்கியாக, லாலு நிதிஷ் போன்றோரின் செல்ல குழந்தைகளாக நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட அப்பாவி மக்களின் அவல நிலை இது.

4 – 7 வகுப்பிற்குள் பள்ளி இடைநிற்றல் (Dropouts) 98 விகிதமாக உள்ளது.10 ஆம்வகுப்பு வரை கூட படிக்காமல் ஏறக்குறைய நூறு விழுக்காடு மாணவர்களும் பள்ளிக்கூடங்களை விட்டு வெளியேறுகின்றனர்.

கிஷன்கஞ் மாவட்டத்தின் 17 இலட்சம் மக்களுக்கு இரண்டே இரண்டு கல்லூரிகள் தான் உள்ளன.

தற்போது உவைஸி கட்சி வெற்றி பெற்றுள்ள 5 தொகுதிகளில் பகதூர்கஞ் என்ற தொகுதியில் அமைந்துள்ள நேரு கல்லூரியில் பயிலும் 2 ஆயிரம் மாணவர்களுக்கு கல்லூரியின் முதல்வருடன் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கிறார். ( March 27,Times of India – 2017).

இதுவரை சீமாஞ்சல் பகுதி மக்கள் கண்ணை மூடிக்கொண்டு யாருக்கு வாக்களித்தார்களோ அவர்கள் அந்த மக்களுக்கு பரிசாக வாய்க்கரிசியை தவிர வேறு எதையும் போடுவதற்கு தாயாராக இல்லை என்பதை இந்த புள்ளி விவரங்கள் தெளிவாக காட்டுகின்றன.

சீமாஞ்சல் பகுதி முஸ்லிம்கள் படிப்பதற்கு தயாராக இருக்கின்றனர் ஆனால் தரமான கல்வி நிறுவனங்கள் இல்லை. முஸ்லிம்களில் செயல்படும் கல்வி மேம்பாட்டு அமைப்புகள் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“அரை ரொட்டி தான் உண்போம். ஆனாலும் பிள்ளைகளை படிப்பிப்போம்” (aadhi roti khayenge, phir bhi bachon ko padhayenge) என்பது அந்த அமைப்புகளின் கோஷமாக உள்ளது.

பொருளாதாரம் :

பீகார் மாநிலத்தில் தனிநபர் வருமானம் ரூ. 14,574. சீமாஞ்சல் பகுதியில் தனிநபர் வருமானம் ஆண்டிற்கு வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே.

ஒரு மாதத்திற்கு வெறும் 900 ரூபாய் மட்டுமே ஒரு குடும்பத் தலைவர் சம்பாதிக்கிறார் என்றால் அந்த குடும்பங்களின் ஏழ்மை நிலையை காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு கவலைப்படுபவர்கள் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,57,116 என்பதை இங்கே நினைவில் கொள்வது நல்லது.

சிறு குறு விவசாயிகளான அந்த மக்கள் நிலத்தில் உழுது பயிரிட்டு பாதுகாத்து அறுவடை செய்யும் காலத்தில் ஆண்டு தோறும் பெருவெள்ளம் புகுந்து நாசம் செய்வதே வாடிக்கையாக இருக்கிறது.

இதனால் பொருளாதார ரீதியாக சிறு முன்னேற்றம் கூட காண முடியாத அளவிற்கு ஏழ்மை சூழ்ந்து நிற்கிறது.

காங்கிரஸ் லாலு நிதிஷ் போன்ற மதச்சார்பற்ற தலைவர்கள் தேர்தல் நேரங்களில் வந்து தொப்பியை போட்டுகொண்டு மேடைகளில் வாக்குறுதிகளை வாரி இறைப்பதோடு சரி.அவர்கள் சீமாஞ்சல் மக்களை மனித கூட்டமாக கூட மதிக்கவில்லை என்பது தான் கடந்த 70 ஆண்டுகால சீமாஞ்சலின் சமூக அரசியல் பொருளாதார நிலமை.

வாழ்வுரிமையும் குடியுரிமையும் கேள்விக் குள்ளாக்கப்பட்ட நிலையில்,காலங்காலமாக மதச்சார்பற்ற கட்சிகளிடம் ஏமாந்து போய் வெறுப்பின் விளிம்பில் நின்ற சீமாஞ்சல் மக்களுக்கு அவர்களின் கல்வி சமூக பொருளாதார நிலையில் வளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செயல் திட்டத்தை முன்வைத்து மிக நேர்த்தியாக காய் நகர்த்தியிருக்கிறார் உவைஸி.

CAA போராட்டம் சீமாஞ்சல் பகுதியில் உச்சத்தில் இருந்த போது காங்கிரசும் முதலமைச்சர் நிதீஷும் வாயை கூட திறக்காமல் வஞ்சித்தனர்.தமிழக காங்கிரஸ் தலைமை உவைஸியை விமர்சிப்பதற்கு கொஞ்சம் கூட அருகதை இல்லை என்பதை உணர வேண்டும். கெட்டிக்காரர்களாக இருந்தாலும் எட்டு நாளைக்குத் தான் புளுக முடியும்.எல்லா காலத்திற்கும் புளுக முடியாது.

சீமாஞ்சல் மக்கள் உவைஸியையும் துவக்கத்திலேயே நம்பி வாக்களித்து விடவில்லை.2015 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மஜ்லிஸ் கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளில் 5 இல் டெபாசிட்டை இழந்தது.

ஏற்கனவே கிஷன்கஞ் நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் IFS அதிகாரி சையத் சஹாபுதீன், இதழியலாளர் M.J.அக்பர் போன்றவர்களை வெற்றி பெற வைத்து ஏமாந்துபோன அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது.

2015 தோல்விக்குப் பிறகு அடுத்துவந்த 5 ஆண்டுகள் உவைஸி மிக நுட்பமாக திட்டமிட்டு களப் பணியாற்றினார். ஏழை மக்களுக்கும் தேவையுடைய மக்களுக்குமான நிலையான நீடித்த சமூக பணிகளை மஜ்லிஸ் கட்சியினர் முன்னெடுத்தனர்.

ஓரளவிற்கு படித்த இளைஞர்கள் உலமாக்கள் வணிகர்களை சந்தித்து சீமாஞ்சலின் கல்வி பொருளாதாரம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டிற்கான செயல் திட்டங்களை முன்வைத்து தங்களது கட்சியின் ஆதரவாளர்களாக மாற்றினர்.

மஜ்லிஸ் கட்சியின் 2020 தேர்தல் வாக்குறுதியாக அலிகர் முஸ்லிம் பல்கலையின் வளாகத்தை கிஷன்கஞ்சில் நிறுவிட முயற்சி எடுப்போம் என்றும் சீமாஞ்சல் பகுதி இளைஞர்கள் வேலைதேடி வெளிமாநிலங்களுக்கு செல்வதை குறைக்கும் விதமாக புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட முதலீடுகளை கொண்டு வருவோம் என்றும் வாக்கு கொடுத்துள்ளனர்.

இஸ்லாமிய சித்தாந்தத்தையும் முஸ்லிம்களின் பாரம்பரியத்தையும் மட்டுமே பேசிக்கொண்டு நீண்ட நாட்களுக்கு அமைப்புகளையும் கட்சிகளையும் நடத்திவிட இயலாது.மக்களின் கல்வி பொருளாதாரம் உள்ளிட்ட வாழ்வியல் மேம்பாட்டுக்கான நிலையான திட்டங்களே ஒரு அமைப்பை எல்லா காலத்திற்கும் உயிரோட்டமாக வைத்திருக்கும் என்ற செய்தி தமிழகத்திற்கும் பொருந்தக் கூடியது தான்.

சமூகத்தின் மீதான அக்கறையுடன் சீமாஞ்சலின் கள நிலவரத்தையும் புரிந்து கொண்ட மஜ்லிஸ் கட்சி முன்வைத்த நிலையான சமூக முன்னேற்றத் திட்டங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது.

இதனால் சென்ற ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிஷன்கஞ் தொகுதியில் ஏறக்குறைய 3 இலட்சம் வாக்குகளை மஜ்லிஸ் கட்சியின் வேட்பாளர் பெற்றதும், அதே 2019 இல் கிஷன்கஞ் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றதும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது .

இதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்திருந்தும், மஜ்லிஸ் கட்சி தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு தானாக முன்வந்தும் அவர்களை புறக்கணித்த காங்கிரஸ் கட்சியின் பண்ணையார் திமிருக்கு சீமாஞ்சல் மக்கள் வசமாக சுளுக்கு எடுத்து விட்டுள்ளனர்.

இன்றைய பச்சை சுயநலமான தேர்தல் அரசியலின் அசிங்கத்தில் உவைஸியும் அந்த மக்களை ஏமாற்றமாட்டார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இந்த எச்சரிக்கை உணர்வுடன் உவைஸியின் முயற்சியை நாம் அனைவரும் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.

பீகார் தேர்தல் முடிவுகள் விரும்பத்தக்கவை அல்ல தான். பாசிச சக்திகளின் கை மீண்டும் மேலோங்கியுள்ளது தான். மறுப்பதற்கு இல்லை. ஆனால் பீகார் அரசியலின் முன்பின் நிலவரங்களை உள்வாங்காமல் உவைஸியை மட்டுமே அதற்கு காரணப்படுத்தி விமர்சித்த சகோதரர்கள் உரிய பரிகாரத்தை தேட வேண்டும்.

சீமாஞ்சல் பகுதியில் ஒரு தரமான பள்ளிக்கூடத்தை நிறுவி ஏழை எளிய மக்களுக்கு இலவச கல்வி வழங்குவது பொருத்தமான பரிகாரமாக அமையும்.

By