கடவுளை காப்பாற்ற புறப்பட்டவர்களை மூக்குடைக்கும் அம்மன்..

குலதெய்வ வழிபாடுகளை உணர்த்தும் மூக்குத்தி அம்மன்..! - Seithipunal

இது #மூக்குத்தி_அம்மன் பட விமர்சனம் (அல்ல)!

அதன் கிளைமாக்ஸ் வசனம், படத்தின் மையக்கருத்து இந்த காணொலி! இக்கருத்தை துணிந்து படமாக தயாரிக்க முன்வந்த வேல்ஸ் உயர்கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஐசரி கணேஷையும், இதில் அம்மனாக நடித்துள்ள உச்ச நட்சத்திரம் நயன்தாராவையும் பாராட்ட வேண்டும். ஊர்வசியின் நடிப்பில் நவரசம் தெரிகிறது. எழுதி, இயக்கி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள ஆர்ஜே பாலாஜி அவருடைய குறும்புத்தனத்தை படத்திலும் காட்டியுள்ளார். ஒரு சீரியசான பக்திப் படமாக இல்லாமல் மத விழிப்புணர்வு ஊட்டும் சமூகப்படமாகவும் இதை கருதலாம். இப்படம் பற்றிநான் எழுத நினைத்த விமர்சனக் கருத்துக்களை வேறொரு நண்பர் வாட்சப்பில் எழுதி இருந்தார்! அதை அப்படியே உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்!”இது திரை விமர்சனம் கிடையாது. ஒரு சாதாரண திரை ரசிகனாக, யான் பெற்ற இன்பத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் அறம். மூக்குத்தி அம்மன் கே.ஆர்.விஜயாவின் மற்றொரு அம்மன் படமாக, அற்புதங்கள் நிகழ்த்தும் படமாக இருக்கும் என்று நினைத்தே படம் பார்க்கத் துவங்கினேன். ஆனால் கடவுள் பெயரை தாங்கிய படத்தில் கடவுளின் பெயரால் நடக்கும் மூடத்தனங்களை, களவாணித்தனங்களை அடித்து நொறுக்கியிருக்கிறாள் இந்த மூக்குத்தி அம்மன்.

#அம்பாள்_என்றைக்கு_பேசியிருக்கிறாள் என்கிற கேள்வியும், கோயில்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக மாறி விடக்கூடாது என்றுதான் சொல்கிறேன் என்று 65 ஆண்டுகளுக்கு முன்னரே பகுத்தறிவுக் கேள்விகள் எழுப்பிய பாரம்பரியம் தமிழ்த் திரைப்படங்களுக்கு உண்டு. கடவுளைக் கொண்டே கடவுளின் பெயரால் நடக்கும் கயமைத் தனங்களை கேள்வி கேட்பது என்கிற சிந்தனை சில தமிழ்ப்படங்களில் கையாளப்பட்டு இருந்தாலும் முள்ளை முள்ளால் எடுக்கும் மூக்குத்தி அம்மனின் இயக்குநரின் ஜனரஞ்சமாக யுக்திக்கு வாழ்த்துக்கள். மூக்குத்தி அம்மனாக #நயன்தாரா அழகுப் பதுமையாக இல்லாமல் கடவுளின் பெயரால் கார்ப்பரேட் சாமியார்கள் நடத்தும் அட்டூழியங்களை கேள்வி கேட்கும் கடவுளாகவும், அம்மன் போன்ற சிறு தெய்வங்கள் திருப்பதி கோயில்களில் உள்ள நிறுவன மயமாக்கப்பட்ட பெருதெய்வங்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்கிற விவாதத்தையும் எழுப்பி கம்பீரமாக நிற்கிறார்.

#ஏங்கல்ஸ்_ராமசாமி என்று பெயரில் கதாநாயகனாக வரும் R.J. பாலாஜி பட்டையும், கொட்டையுமாக படம் முழுக்க காட்சி தந்து கார்ப்பரேட் சாமியார்களின் தோலுரித்து பட்டையைக் கிளப்பியுள்ளார். (குறிப்பாக கோவை வெள்ளியங்கிரி மலையோர ஜக்கி வாசுதேவை நேரடியாக குறி வைக்கிறார்.)அற்புதங்கள் நிகழ்த்தினால் மட்டுமே கடவுளை மக்கள் நம்புவார்கள் என்கிற மக்களின் பொது புத்தியை கார்ப்பரேட் சாமியார்கள் எப்படி வியாபாராமாக ஆக்குகிறார்களோ அதே வழியில் சென்று மூடத் தனங்களை புரிய வைக்கிறது மூக்குத்தி அம்மன்.

கடவுளின் ஏஜென்ட்டாக, கடவுளையே காப்பாற்றப் போவதாக இங்கு ஏமாற்று வேடம் போடும் கார்ப்பரேட் பாபாக்களை, ஜக்கிகளை, நித்தியானந்தாக்களை எளிய கேள்விகளால் திக்கு முக்காடச் செய்கிறது படத்தின் வசனங்கள். பெரு முதலாளிகளின் கருப்புப் பணத்தை பாதுகாக்கவும், வெள்ளையாக்கவுமே கார்ப்பரேட் சாமியார்கள் இந்த சமூகத்தில் உருவாக்கப்படுகிறார்கள் என்பதை படம் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.

சர்வ சக்தி படைத்ததாக நம்பப்படும் கடவுள், எதிரியை (கார்ப்பரேட் சாமியார்) ஒரு நொடியில் பழிவாங்கும் இரத்த வெறியோடு ஹீரோயிசத்தைக் காட்டி கொன்று விடாமல் அவன் செய்யும் ஏமாற்று வேலைகளை மக்களோடு கருத்து உரையாடல் நடத்தி மக்களின் மனங்களில் இருந்து அவனை வெளியேற்றுவது என்கிற இயக்குநரின் யுக்தி, அவரின் சிந்தாந்தத் தெளிவு, மக்கள் சக்திதான் முடிவெடுக்க வேண்டியவர்கள் என்பதை நமக்கு தெளிவு படுத்துகிறது.பெண் என்பவள் ஆணின் அடிமையாக அடுப்படியில் வாழவேண்டும் என்கிற மனுநீதியை கேள்வி எழுப்பியுள்ளது மூக்குத்தி அம்மன். கதாநாயகனின் தங்கையிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று அம்மன் கேட்கும்போது வாரத்தில் ஒரு நாள் தனக்கு (பெண்ணுக்கு) ஓய்வு கிடைத்தால் போதும் என்று வாழ்வின் எதார்த்தத்தை காட்சிப் படுத்தி பெண் விடுதலைக்கான குரலை அம்மனின் வழியாகவே பேச வைத்து இருப்பது பவுண்டரி ஷாட் என்றால்…திருமணம் செய்து விட்டு நான்கு குழந்தைகளையும், மனைவியையும் கவனிக்காமல் நிர்க்கதியாக விட்டுவிட்டு துறவறம் சென்று, போலி கார்ப்பரேட் சாமியாரிடம் அடைக்கலம் அடைந்து, பின் அந்த சாமியார் அம்பலப்பட்ட பின் கணவன் திரும்பி வரும்போது “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்று ஏற்றுக் கொள்ளாமல் அவனை நிராகரித்து கடைசி காட்சியில் மனைவி (ஊர்வசி) பேசும் வசனம் படத்தில் தோனியின் கடைசி வின்னிங் சிக்சர் ஷாட்.போலி கார்ப்பரேட் சாமியார்கள் அனைத்து மதத்திலும் இருக்கிறார்கள் என்பது உண்மையே. சில ஆண்டுகளுக்கு முன் அமீர்கான் நடித்து இந்தியில் வெளி வந்த P.K. படமும், சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் பிருத்விராஜ் சுகுமாறன் நடித்த ‘Trance’ என்கிற திரைப்படமும் (கிறித்துவ) கார்ப்பரேட் சாமியார்களின் மூடத்தனங்களை தோலுரித்துக் காட்டியது. அந்த வரிசையில் #மூக்குத்திஅம்மன்ஆன்மீகம் பேசும் சாமி படமாக அல்லாமல்கடவுளின் பெயரால் நடக்கும் மூடத்தனத்தை ஒழிக்க வந்த சமூகப் படமாகவும் மிளிர்கிறது!”

நன்றி – சிவகுமார் சங்கரலிங்கம்

By