By Hello Asia News Desk, Canada
மிச்சிகன்: மிச்சிகன் தமிழ்ச் சங்கம் சார்பில் பிப்ரவரி 8, 2026 அன்று லேக் ஓரியன் உயர்நிலைப் பள்ளியில் தைப்பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. “மார்கழி உச்சியில் மலர்ந்தது தைப்பொங்கல்” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கூற்றை நினைவுபடுத்தும் வகையில், இந்த விழா தமிழர்களின் பாரம்பரிய மரபுகளையும் கலாச்சார பெருமையையும் பிரதிபலித்தது. மிச்சிகன் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் குடும்பத்துடன் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
நிர்வாகக் குழுவின் அர்ப்பணிப்பு:

மிச்சிகன் தமிழ் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பல மாதங்களாக இரவு பகலாக உழைத்து இந்த விழாவை வெற்றிகரமாக நடத்தினர். சங்கத் தலைவர் திருமலைஞானம் சிவஞானம், துணைத் தலைவர் இராம்துரை பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜய் வெங்கடசுப்பிரமணியன், இணைச் செயலாளர் மிருநாளினி செந்தில்ராஜா, பொருளாளர் அருண் வேலுசாமி ஆகியோரின் தலைமையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜகுமாரி ராஜன், கிரிகுஜலாம்பாள் தில்லை சிதம்பரம், மார்க்கெட்டிங் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் கிருஷ்ணராஜ், இணைய ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி பிச்சை, செயல்பாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விக்னேஷ் வேலுசாமி உள்ளிட்ட பலரும், பல துணைக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களும் விடாமுயற்சியுடன் பணியாற்றினர்.
பாரம்பரிய சிறப்புகள்:
வரவேற்பு முகப்பில் அன்பான உபசரிப்பும், தமிழர்களின் பாரம்பரிய விருந்தோம்பலாம் வாழை இலையில் பரிமாறப்பட்ட சைவ மற்றும் அசைவ உணவுகளும் கடல் கடந்த தமிழர்களின் உறவை உறுதிப்படுத்தியது. புகைப்பட அலங்காரக் கூடம், வணிகர்களின் அங்காடிகள், விளம்பரதாரர்கள் கூடங்கள் என்று எங்கு திரும்பினாலும் மக்கள் திரள் திரண்டிருந்தது.
குத்துவிளக்கு ஏற்றி, தமிழ்த் தாய் வாழ்த்து, இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதம் பாடி பெரியவர்களும் குழந்தைகளும் விழாவைத் துவக்கி வைத்தனர்.
கலை நிகழ்ச்சிகள்:
விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. பெரியோர், சிறியோர் என அனைவரும் நடனம், பாடல் மற்றும் நாடகம் எனப் பல்சுவை நிகழ்ச்சிகளால் அரங்கம் நிறைந்தது.
தமிழர்களின் ஆதி இசையான பறை இசையை டெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடத்தினர் அரங்கம் அதிர இசைத்ததில் மொத்த அரங்கமும் நடனமிட்டது.
சாதனையாளர் விருதுகள்:

விழாவில் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பெரியோர் மற்றும் சிறியோர்களுக்கான சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றோர் பட்டியல்:
மித்ரா கவ்ஷிக் – ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் தேசிய அளவில் தகுதிபெற்றவர். ஓஹியோ, மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் இந்தியானாவில் நடைபெற்ற அழைப்பிதழ் அளவில் முதல் பரிசு வென்றவர். கிழக்கு/மத்திய மேற்கு மாநிலங்களில் 12 மாநிலங்களில் இருந்து அதே வயது வகுப்பில் 25 குழந்தைகளுக்கு எதிராக பிராந்திய அளவில் முதல் பரிசு பெற்று தேசிய அளவில் பங்கேற்க தகுதி பெற்றவர். தேசிய அளவில் மூன்றாம் இடம் வென்றவர்.
கெவின் மார்ஷல் – கல்வியில் முதல் நிலை – பிராந்திய அளவில் தகுதி பெற்றவர், இரண்டாம் நிலை – மாநில அளவில் தகுதி பெற்றவர், மூன்றாம் நிலை – சர்வதேச அளவில் பங்கேற்பாளர்.
ரோஷன் சௌந்தர் – இளம் எழுத்தாளர், தொழில்முனைவோர் முயற்சி மற்றும் சமூக நோக்கம். “குவெஸ்ட் ஃபார் ஹானர்” என்ற தலைப்பில் நாவல் எழுதி வெளியிட்டவர். இந்த திட்டத்தை அவர் 11 வயதில் தொடங்கி 14 வயதில் வெளியிட்டார். இந்த இளம் எழுத்தாளர் 120 பிரதிகளை விற்று $1,200 நன்கொடை திரட்டியுள்ளார். அவரது இலக்கு 500 பிரதிகளை விற்று $5,000 திரட்டுவது, இது டிஎன்எஃப் மூலம் ஒரு வருடத்திற்கு 50 மாணவர்களின் கல்விக்கு உதவும்.
டாக்டர். முகம்மது ஹுசைன் அப்துல் ஜப்பார் – 55 சக மதிப்பாய்வு செய்யப்பட்ட வெளியீடுகளின் ஆசிரியர், ஜர்னல் ஆஃப் நேச்சர் மெட்டீரியல்ஸ் உட்பட. ஓக்லாண்ட் கவுண்டி, மிச்சிகனில் 40 அண்டர் 40 விருது வென்றவர். 27 காப்புரிமை விண்ணப்பங்கள் மற்றும் 15 காப்புரிமை மானியங்களின் மகத்தான கண்டுபிடிப்பு பதிவு, அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளின் தீவிர ஆதரவாளர் மற்றும் சமூக நிகழ்வுகளில் அழைக்கப்பட்ட பேச்சாளர்.
கிறிஸ்துமஸ் மர அலங்கார போட்டி
விழாவில் கிறிஸ்துமஸ் மர அலங்கார போட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு பிரியா சபரிநாதன் அவர்களுக்கும், இரண்டாம் பரிசு சில்வியா டேனியல் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
மெகா ட்யூனர்ஸ் இசைக் கச்சேரி
விழாவின் சிறப்பம்சமாக, தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பாடகர்கள் மெகா ட்யூனர்ஸ் இசைக்குழுவின் மூலம் உலகப் புகழ்பெற்ற பாடகர்களான திரு. ஹரிஹரசுதன், திரு. ரவிகோபிநாத், திரு. கணேஷ் வெங்கட்ராமன், திருமதி. லதா கிருஷ்ணா ஆகியோரின் குரல் மக்களை மகிழ்வித்தது. மக்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நடனமாடும் அளவுக்கு இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
விளம்பரதாரர்கள் மற்றும் தன்னார்வலர்கள்
விளம்பரதாரர்கள், சங்க நிகழ்ச்சிகளில் புகைப்படம் மற்றும் காணொளியாக்கும் தன்னார்வலர்கள் மேடையில் சிறப்பு செய்யப்பட்டனர். புகைப்படம் மற்றும் காணொளி பதிவுக்கு மணிவண்ணன் தியாகராஜன், உமா சங்கர் பாரிவாக்கம், ஆம்ப்ரோஸ் ராஜ்குமார், ராம்குமார் ராமலிங்கம், விஜயசாரத் பார்த்தசாரதி, கார்த்திக் லக்ஷ்மணன், புவனேஷ்வர் செல்வமணி, கண்ணன் பாலசுப்ரமணியன், யுவரோஷன் சண்முகராஜன் கார்த்திக் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
குலுக்கல் பரிசுப் போட்டிகள் நடத்தப்பட்டு பாக்கியசாலிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. கலந்துகொண்ட அனைத்துக் குடும்பத்தினருக்கும் இனிப்புப் பலகாரத்துடன் கூடிய பரிசுப் மஞ்சள் பையில் வழங்கப்பட்டது.
விழா சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டு நன்றி உரையோடு இனிதே நிறைவு பெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், கலை நிகழ்ச்சி இயக்குனர்களுக்கும், கலைஞர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், அலங்காரக்குழுவிற்கும், புகைப்படக்குழுவிற்கும் மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டிலும் தமிழர் பண்பாட்டை உயிரோடு காக்கும் இந்த தைப்பொங்கல் விழா, மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பெருமைமிகு முயற்சியாகக் கருதப்படுகிறது.
தந்தை பெரியார் அவர்கள் பொங்கல் குறித்துக் கூறியவை: பொங்கல் மட்டுமே தமிழர் பண்பாட்டு விழா. இது சடங்குகள் அற்ற, உழைப்பைப் போற்றும் பண்டிகை. எனவே பொங்கல் பண்டிகையை மதங்களை கடந்து அனைத்து தமிழர்களும் கொண்டாடவேண்டும்.
