By MS, Hello Asia News Desk
உலகின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று. ஆனால், அதிகாலை ஆறு மணிக்கு வந்த ஒரே ஒரு இமெயில் — 30,000 பேரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது. அது தான் ஆரக்கிள்.
ஏன் திடீரென்று நீக்கினார்கள்?
ஆரக்கிள் நஷ்டத்தில் இயங்குகிறதா? இல்லை. கடந்த காலாண்டில் நிகர லாபம் 95 சதவீதம் உயர்ந்தது — 6.13 பில்லியன் டாலர். எதிர்கால ஒப்பந்தங்களோ 523 பில்லியன் டாலர். வருவாயில் பிரச்சனையில்லை. ஆனால் பிரச்சனை வேறு இடத்தில் இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு. அதற்கான தரவு மையங்கள். அவற்றை கட்ட வேண்டும். கட்டுவதற்கு பணம் வேண்டும். பணம் வர வேண்டுமென்றால் — மனிதர்களை நீக்க வேண்டும். அவ்வளவுதான் கணக்கு.
எப்படி நீக்கினார்கள்?
அழைப்பு இல்லை. சந்திப்பு இல்லை. மேலாளர் பேச வரவில்லை. மனிதவள துறை அழைக்கவில்லை. அதிகாலை ஆறு மணிக்கு “Oracle Leadership” என்ற பெயரில் வந்த இமெயில் — “உங்கள் பணியிடம் நீக்கப்பட்டது. இன்றே கடைசி நாள்.” இமெயில் படித்ததும் கணினி திரை அணைந்தது. வேலை முடிந்தது.
யார் யார் பாதிக்கப்பட்டார்கள்?
அமெரிக்கா, இந்தியா, கனடா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், உருகுவே — உலகம் தூங்கும் நேரத்தில், ஆரக்கிள் தன் பணியாளர்களின் வேலையைப் பறித்தது.
இந்தியாவில் மட்டும் 12,000 பேர். இந்திய ஆரக்கிள் பணியாளர்களில் அது 40 சதவீதம் — ஒரே நாளில் தெருவில். வாஷிங்டனில் 491 பேர். அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கானோர். மொத்தத்தில் 20,000 முதல் 30,000 பேர் — நிறுவனத்தின் 48 ஆண்டு வரலாற்றிலேயே இது மிகப் பெரிய வேலை நீக்கம்.
நிறுவனத்திற்கு என்ன லாபம்?
30,000 பேரை நீக்கினால் — ஆண்டுக்கு 8 முதல் 10 பில்லியன் டாலர் மிச்சமாகும். அந்த பணம் நேரடியாக செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்கு போகும். ஆரக்கிள் ஏற்கனவே 58 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது. பங்கு விலை 2025 செப்டம்பரிலிருந்து பாதியாக சரிந்துள்ளது. அதனால் — மனிதர்களை விற்று இயந்திரங்களை வாங்கும் தந்திரம்.
என்ன விளைவு ஏற்படும்?
இந்தியாவில் அமேசான், மெட்டா, எபிக் கேம்ஸ் என்று ஏற்கனவே பல நிறுவனங்கள் வேலை நீக்கி வருகின்றன. 12,000 திறமையான தொழில்நுட்ப நிபுணர்கள் ஒரே நாளில் மீண்டும் வேலை தேடுகிறார்கள். வேலை கொடுக்கக் கூடிய நிறுவனங்கள் தான் இல்லை.
ரெட்டிட்டிலும் லிங்க்ட்இனிலும் விவாதங்கள் அனல் பறக்கின்றன. வழக்கறிஞர்கள் சட்டத்தில் ஏதேனும் உள்ளதா வேலை இழந்தவர்களுக்கு இழப்பீடு பெற பார்க்கிறார்கள். வழக்குகள் பதியப்படலாம்.
சுருக்கமாக சொல்வதென்றால் — ஆரக்கிள் செயற்கை நுண்ணறிவிற்காக உண்மையான மனித நுண்ணறிவுகளை மனிதாபிமானம் இன்றி தெருவில் இறக்கி விட்டு விட்டது.
This news is proudly sponsored by Crazy Gorilla, a Sarnia, Ontario–based designer garments and accessories brand. Click the below image to shop now and support our sponsor and news platform.

